சிவன் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி ஆதிவாசி மக்கள் சாலை மறியல்

மகா சிவராத்திரி விழாவையொட்டி சிவன் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க கோரி கூடலூரில் ஆதிவாசி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், ஆதிவாசி மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2018-02-13 21:30 GMT
கூடலூர்

கூடலூர் நகராட்சி தொரப்பள்ளி அருகே கோடமூலா, அள்ளூர்வயல் ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன், பொம்மதேவர், கெலவத்து மாரியம்மன், பரதேவதை கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களில் ஆதிவாசி மக்கள் பாரம்பரியமாக வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோவில்கள் அமைந்துள்ள இடம் தனியார் எஸ்டேட் வசம் உள்ளது.

கடந்த ஆண்டு எஸ்டேட் வழியாக கோவிலுக்கு செல்லும் பாதை சம்பந்தமாக ஆதிவாசி மக்களுக்கும், தனியார் எஸ்டேட் நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. எனவே ஆதிவாசி மக்கள் கோவிலுக்கு செல்ல புதிய பாதை அமைத்து பயன் படுத்தி வந்தனர். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் மகா சிவராத்திரி விழாவையொட்டி கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆதிவாசி மக்கள் தங்கள் கோவிலுக்கு சென்று விழா நடத்த எஸ்டேட் நிர்வாகம் அனுமதி மறுப்பதாக புகார் தெரிவித்தனர். மேலும் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று பகல் 12¼ மணிக்கு கோடமூலா, அள்ளூர்வயல் ஆதிவாசி மக்கள் தங்களின் குழந்தைகளுடன் கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கேரளா- கர்நாடகா மற்றும் ஊட்டி செல்லும் சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது மகா சிவராத்திரி வழிபாடு நடத்த எஸ்டேட் நிர்வாகம் அனுமதி மறுத்து வருவதாகவும், இதற்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக கூறி ஆதிவாசி மக்கள் கோஷமிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆதிவாசி மக்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அப்போது ஆதிவாசி வாலிபர் ஒருவரை போலீசார் திடீரென்று இழுத்து வேனில் ஏற்ற முயன்றனர். இதனால் ஆதிவாசி மக்கள், பெண்கள் ஆவேசம் அடைந்தனர்.

அவர்கள் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பெண்கள், குழந்தைகள் நெரிசலில் சிக்கி அலறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் அவர்களை போலீசார் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்ற முயன்றனர். இதனால் சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களின் செருப்பு உள்ளிட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் அந்த இடம் போர்க்களம் போல் மாற தொடங்கியது. பின்னர் போலீசார் கேட்டு கொண்டதன் பேரில் ஆதிவாசி மக்கள் வாகனங்களில் ஏறினர். மறியலில் ஈடுபட்ட 58 பெண்கள் உள்பட 116 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து ஆதிவாசி மக்கள் கூறும்போது, பல தலைமுறைகளாக வழிபட்டு வரும் கோவிலுக்கு செல்ல முடியாதபடி வேலி அமைத்து தனியார் எஸ்டேட் நிர்வாகம் தடை விதிக்கிறது. எங்களுக்கு வழிபாடு நடத்தும் உரிமையை தர வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்றனர்.

தனியார் எஸ்டேட் நிர்வாகம் தரப்பில் கூறும் போது, ஆதிவாசி மக்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் விதிக்க வில்லை. எஸ்டேட்டுக்குள் ஏற்கனவே உள்ள சாலை வழியாக கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஆனால் சிலரின் தூண்டுதலின் பேரில் ஆதிவாசி மக்கள் எஸ்டேட்டுக்குள் புதிய சாலை அமைத்து உள்ளனர். இதற்காக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு அதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்