சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் முதியவர் பலி

புதுக்கோட்டை அருகே சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

Update: 2018-02-13 22:30 GMT
புதுக்கோட்டை,

சென்னை, பல்லாவரம் மற்றும் தாம்பரம் பகுதியை சேர்ந்த 15 பேர் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து ராமசுவேரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஒரு வேனில் சுற்றுலா புறப்பட்டனர். வேனை சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலையில் வேன் புதுக்கோட்டை அருகே உள்ள அகரப்படி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. அதிகாலை நேரம் என்பதால் வேனில் இருந்தவர்கள் கண்விழித்து அலறினர். அதற்குள் அந்த வேன் சாலையோர பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது.

இதில் வேனின் முன் இருக்கையில் அமர்ந்து வந்த தாம்பரத்தை சேர்ந்த காமராஜ் (60) இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் வேனில் இருந்த சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த கோகிலா பிரியா (18), பஞ்சவர்ணம் (70), விஜயா (45), கார்த்திக் (35), செல்வம் (45), மாலா (45) உள்பட 14 பேர் காயமடைந்து காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சல் போட்டனர்.இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் வேனில் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 14 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காமராஜின் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துகுள்ளான வேனை மீட்டனர். இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை அருகே சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள் ளான சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்