சர்வதேச நகரான ஆரோவில் பொன் விழா; பிரதமர் மோடி 24-ந் தேதி புதுவை வருகை

சர்வதேச நகரான ஆரோவில் பொன் விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருகிற 24-ந் தேதி புதுவை வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார்.;

Update: 2018-02-13 23:45 GMT
புதுச்சேரி,

புதுவை அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் எந்த தேதியில் அவர் புதுவை வருவார் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, தலைமை செயலாளர் அஸ்வனி குமார் ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு அதிகாரிகளை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி புதுவை வருகை குறித்து ஆலோசனை நடத்தினர். இந்தநிலையில் வருகிற 24-ந் தேதி பிரதமர்மோடி புதுவை வருவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசுத்துறை செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது புதுவையில் துறைமுக சரக்கு முனையம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திறந்து வைக்க வேண்டும் என்று அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அரசு விழாவில் பங்கேற்பாரா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதேபோல் ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சேதராப்பட்டில் ரூ.800 கோடி செலவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அதிலும் அவர் பங்கேற்பாரா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதற்கிடைய மாநில தலைவர் பா.ஜ.க. சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘பிரதமர் மோடி வருகிற 24-ந் தேதி புதுவை வருவது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பா.ஜ.க. நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்க சம்மதம் தெரிவித்து உள்ளார். இந்த நிகழ்ச்சியை பொதுக்கூட்டமாக நடத்துவதா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். பிரதமரின் சுற்றுப்பயண முழு விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகள்