வேலழகன் கொலை வழக்கில் கைதான தொழிலதிபர் உதயகுமார் ஜாமீனில் விடுதலை

வேலழகன் கொலை வழக்கில் கைதான தொழிலதிபர் உதயகுமார் நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்.

Update: 2018-02-13 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்தவர் வேலழகன்(வயது42). தொழில் அதிபரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான இவர் கடந்த 19-4-2017 அன்று திருபுவனை அருகே உள்ள சன்னியாசிக்குப்பத்தில் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திகேயன் என்கிற ரமேஷ்(36), சிவராமன் என்கிற சிவராமகிருஷ்ணன்(22), சன்னியாசிக்குப்பத்தை சேர்ந்த செங்கதிரவன் (44), தொழிலதிபர் உதயகுமார்(44), பூபாலன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ஜாமீன் கேட்டு புதுவை கோர்ட்டில் உதயகுமார் மனு தாக்கல் செய்தார். இதற்கு போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உதயகுமார் ஜாமீனில் வெளியே வந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என போலீசார் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்தநிலையில் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உதயகுமாரை கைது செய்தது செல்லாது என்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டு புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விசாரித்த புதுவை கோர்ட்டு உதயகுமாருக்கு நிபந்தனை விதித்து அவரை ஜாமீனில் விடுதலை செய்தது. அதில் மறு உத்தரவு வரும் வரை காரைக்கால் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்