இறந்தவர் சடலத்தை வயல்வெளியில் சுமந்து செல்லும் கிராம மக்கள்

களக்காடு அருகே இறந்தவர் சடலத்தை சுடுகாட்டுக்கு சுமந்து செல்லும் கிராமமக்கள் அவலநிலை நீடிக்கிறது. எனவே அங்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-02-14 00:15 GMT
களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள உதயமார்த்தாண்டபேரியில் சுமார் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். கோவிலம்மாள்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் இறந்தவர்களின் சடலங்களை சாலைப்புதூர் குளக்கரையில் உள்ள சுடுகாட்டில் புதைத்து வருகின்றனர்.

அங்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லாததால், சடலங்களை வயல்வெளி வழியாக சுமந்து செல்கின்றனர். இங்கிருந்து சுடுகாடு 1½ கி.மீ. தூரத்தில் உள்ளது.

நேற்று முன்தினம் உதயமார்த்தாண்டபேரியை சேர்ந்த நம்பி (வயது 72) என்பவர் உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது சடலத்தையும் வயல்வெளி வழியாகவே கொண்டு சென்றனர். இதனால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்