கைக்குழந்தைகளுடன் கிராம மக்கள் விடிய, விடிய போராட்டம்; 271 பேர் கைது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கைக்குழந்தைகளுடன் கிராமமக்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 271 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-02-13 23:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி- மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த தொழிற்சாலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இதற்கு அந்த நிறுவனத்தை சுற்றி உள்ள அ.குமரெட்டயாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டயாபுரத்தை சேர்ந்த 70 மாணவ-மாணவிகளை பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப மறுத்து போராட்டம் நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்தில் தொழிற்சாலை விரிவாக் கத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதன்பிறகு சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். பூங்காவில் மக்கள் குடியேற முயன்றனர். அப்போது போலீசார் அவர் களை தடுத்து நிறுத்தினர். இதனால் பூங்கா வாசலில் பொதுமக்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

தகவல் அறிந்த தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் ராமச்சந்திரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. பொதுமக்கள் விடிய, விடிய கொட்டும் பனியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடந்தது. அப்போது தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ. கீதாஜீவன் போராட்டம் நடத்தியவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் போலீசார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட அறிவுறுத்தினர். ஆனால் மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். மதியம் 12 மணி அளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தார். அதன்பிறகு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தொடங்கினர்.

அங்கிருந்து செல்ல மறுத்தவர்களை போலீசார் தூக்கி அப்புறப்படுத்தினர். கைக்குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகள் ஆகியோரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி பஸ்சில் ஏற்றினர். அப்போது, சிறிய குழந்தைகள் கதறி அழுதபடியே பஸ்சில் ஏறினர். கைது செய்யப்பட்டவர்களை அழைத்து சென்றபோது போலீஸ் பாதுகாப்பை மீறி பஸ்சில் இருந்து சிலர் கீழே குதித்தனர். அவர்கள் பிரையண்ட்நகர் செல்லும் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். மீண்டும் போலீசார் அவர்களை பஸ்சில் ஏற்றி அழைத்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாத்திமாபாபு, நாம் தமிழர் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஆல்பர்ட், வேல்ராஜ், மகேஷ் உள்பட 271 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 117 ஆண்கள், 6 மாணவ-மாணவிகள் என மொத்தம் 123 பேர் பிரையண்ட்நகர் ராசி மகாலில் தங்க வைக்கப்பட்டனர். 102 பெண்கள், 33 பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், 13 கைக்குழந்தைகள் என மொத்தம் 148 பேர் ராணி மகாலில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் அப்புறப்படுத்தியபோது சுந்தரம், செல்வி, ஆறுமுகம் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்