மதுரவாயல் அருகே மரக்கடையில் பயங்கர தீ விபத்து
மதுரவாயல் அருகே மரக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
பூந்தமல்லி,
மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் மெயின் ரோடு, திருமுருகன் நகர் பகுதியில் பாபு (வயது 36), என்பவருக்கு சொந்தமான மரக்கடை உள்ளது.
இங்கு நாற்காலிகள், மேசைகள் போன்ற மரச்சாமான்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 10–க்கும் மேற்பட்டோர் வேலைப்பார்த்து வருகின்றனர்.
கொழுந்துவிட்டு எரிந்த தீ
நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்ததும் ஊழியர் கள் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கடையில் இருந்து புகை வந்தது. அந்த வழியாக சென்ற மக்கள் இதை பார்த்து மதுரவாயல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கடைக்குள் சென்று பார்த்த போது கடைக்குள் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.
1 மணி நேர போராட்டம்
உடனே அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தீயின் அளவு அதிகமானதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமானது.
இதையடுத்து ராமாபுரம், விருகம்பாக்கம் மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இருந்து 4 வாகனங்களில் கூடுதல் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது.
ரூ.30 லட்சம் பொருட்கள்
இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இந்த விபத்தில் கடையில் இருந்த மூலப்பொருட்கள், எந்திரங்கள், விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த மரச்சாமான்கள் என சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட் கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.