விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் 4 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் கலெக்டர் தகவல்

விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் 4 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-02-13 21:30 GMT
தேனி

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகள், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நடந்து வருகின்றன. விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 4 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, பெரியகுளம் தாலுகாவில் மேல்மங்களம் சமுதாயக்கூட வளாகம், உத்தமபாளையம் தாலுகாவில் சின்னமனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், உத்தமபாளையம் பி.டி.ஆர். பண்ணை அருகில் என 4 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இங்கு சன்னரகம் நெல் ஒரு குவிண்டால் ரூ.1,660-க்கும், பொது ரகம் ஒரு குவிண்டால் ரூ.1,600-க்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை இங்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம்.

மேலும், மாவட்டத்தில் ஏதேனும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திலோ, அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலோ மனு அளிக்கலாம். அவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கும் இடங்களிலும் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்