அரசரடி மலைக்கிராமத்தில் சோலார் விளக்குகள் பழுதால் இருளில் தவிக்கும் கிராம மக்கள் மாணவ, மாணவிகள் அவதி

அரசரடி மலைக்கிராமத்தில் சோலார் விளக்குகள் பழுதடைந்து இருப்பதால் கிராம மக்களும், மாணவ, மாணவிகளும் இருளில் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Update: 2018-02-13 21:30 GMT
கடமலைக்குண்டு

கடமலை-மயிலை ஒன்றியத்தில் வெள்ளிமலை அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அரசரடி, பொம்மராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்த கிராமங்களுக்கு மின்சார வசதி செய்யப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலைக்கிராமங்களில் மின்சார வசதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளதால் மின்சார வசதி செய்ய வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.

அதனைத்தொடர்ந்து கிராமங்களில் அரசு சார்பில் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்ட பின்பு அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மலைக்கிராமங்களில் அமைக்கப்பட்ட சோலார் விளக்குகள் பழுதடைய தொடங்கியது.

இதனால் மலைக்கிராம மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். கிராமங்களை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. கிராமங்களில் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். இதேபோல மலைக்கிராமங்களில் ஏராளமான மாணவ -மாணவிகள் உள்ளனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் இவர்களால் படிக்க முடியவில்லை.

எனவே பொதுமக்கள், தங்கள் குழந்தைகளை வெளியூர்களுக்கு அனுப்பி விடுதிகளில் தங்கி படிக்க வைத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசரடி, பொம்மராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பழுதடைந்துள்ள சோலார் விளக்குகளை உரிய முறையில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்