மொபட்டில் சென்ற அரசு பெண் அதிகாரியை கீழே தள்ளி 10 பவுன் சங்கிலி பறிப்பு

வேளாங்கண்ணி அருகே மொபட்டில் சென்ற அரசு பெண் அதிகாரியை கீழே தள்ளி 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-02-13 22:15 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள கீழசெட்டிச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மல்லிகா(வயது54). இவர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் வீட்டில் இருந்து மொபட்டில் நாகையை அடுத்த புத்தூருக்கு சென்று அங்குள்ள ஒரு காப்பகத்தில் மொபட்டை நிறுத்தி விட்டு

பின்னர் பஸ்சில் திருவாரூருக்கு வேலைக்கு சென்று, மீண்டும் மாலை புத்தூரில் இருந்து மொபட்டில் வீட்டுக்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு சுமார் 8.15 மணியளவில் மல்லிகா புத்தூரில் இருந்து மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

ஏறும்சாலை என்ற பிரிவு சாலையில் இருந்து நிர்த்தனமங்கலம் செல்லும் சாலையில் மல்லிகா சென்று கொண்டிருந்த போது

பத்தினியம்மன் கோவில் அருகே வைத்து மோட்டார் சைக்கிளில் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்த மர்ம மனிதர்கள் இருவர் திடீரென மல்லிகாவை மொபட்டில் இருந்து கீழே தள்ளினர். இதை சற்றும் எதிர்பாராத மல்லிகா மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்மமனிதர்கள் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். மொபட்டில் இருந்து கீழே விழுந்ததில் மல்லிகாவுக்கு காயம் ஏற்பட்டது.

மேலும் சம்பவம் நடந்த நேரம் இரவு என்பதாலும் அப்பகுதியில் சுமார் 1 கி.மீட்டர் தூரத்துக்கு வீடுகள் ஏதும் இல்லாததாலும் சங்கிலி பறிப்பு திருடர்கள் தங்கள் திட்டத்தை அரங்கேற்ற மிகவும் வசதியாக இருந்தது. இது குறித்து மல்லிகா வேளாங்கண்ணி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்றவர்களை தேடி வருகிறார்கள். அரசு பெண் அதிகாரியை மொபட்டில் இருந்து கீழே தள்ளி 10 பவுன் சங்கிலியை மர்ம மனிதர்கள் பறித்து சென்ற சம்பவம் வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்