சிவகங்கை அருகே சிறுமியை கடத்தி கற்பழிப்பு: 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

சிவகங்கை அருகே சிறுமியை கடத்திச் சென்று கற்பழித்தவர்கள் குறித்து போலீசாருக்கு அடையாளம் தெரிந்தது. இதையடுத்து இதில் சம்பந்தப்பட்ட பிரபல கொள்ளையன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-02-13 21:30 GMT
சிவகங்கை,

சிவகங்கை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் வந்த கும்பலால் கத்தியை காட்டி மிரட்டி கடத்தப்பட்டாள். பின்னர் அந்த கும்பல் சிறுமியை கற்பழித்து விட்டு மதகுபட்டியை அடுத்த கீழப்பூங்குடி பகுதியில் இறக்கிவிட்டு சென்று விட்டனர்.

இது குறித்து அந்த சிறுமி கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மங்களேஸ்வரன் மற்றும் திருமலைக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இந்த சம்பவத்தில் பிரபல குற்றவாளி பர்மா பாண்டி உள்பட 4 பேர் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதில் முக்கிய குற்றவாளியான பர்மா பாண்டி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். சமீபத்தில்தான் அவர் குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார்.

மேலும் இந்தக் குற்றவாளிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு அந்த சிறுமியை இறக்கி விட்டு காரில் சென்றபோது தான் இளையான்குடி துணை மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்த முருகேசன் (வயது 40) என்பவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டுச் சென்றுள்ளனர். இந்த விபத்தில் முருகேசன் இறந்து போயுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்