இலங்கை மற்றும் தமிழகத்தில் உள்ள ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான சொத்து, நிலம் குறித்த ஆய்வு கூட்டம்

இலங்கை மற்றும் தமிழகத்தில் உள்ள ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான நிலம், சொத்துக்களை பாதுகாக்க திருக்கோவில் நிர்வாகம் தவறி விட்டது என்று ஆய்வுக் கூட்டத்தில் பேசப்பட்டது.

Update: 2018-02-13 21:45 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிலங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. திருத்தொண்டர்கள் சபை நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் பேபி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைதுரை, போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இந்து அறநிலையத்துறை தனி தாசில்தார் சிவகுமார், ராமேசுவரம் தாசில்தார் கணபதிராமன், கோவில் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் உள்பட நகராட்சி, மின்வாரிய, உள்ளாட்சி துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கோவில் அதிகாரிகள், தாசில்தாரிடம் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், சொத்துக்கள் குறித்த விவரங்களையும் அவற்றிற்கான அனைத்து ஆவணங்களையும் வருவாய் கோட்டாட்சியருடன் இணைந்து திருத்தொண்டர் சபையினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆய்வு கூட்டத்திற்கு பின்பு கோவிலுக்கு சொந்தமான என்.எஸ்.கே.வீதியில் உள்ள இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது அங்குள்ள வீடுகள் மற்றும் ஒரு சில தனியார் கம்பெனிகள் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருத்தொண்டர்கள் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள், நிலங்கள் ராமேசுவரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்க வேண்டும். ஆனால் திருக்கோவில் நிர்வாகம் 1,329 ஏக்கர் நிலங்களை மட்டும் கணக்கு காட்டி வருகிறது. மீதமுள்ள சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்களை பற்றி முழுமையாக தெரியாமலும், நிலம் மற்றும் சொத்துக்களை நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாக்க திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் தவறி விட்டனர். இலங்கையில் ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. அந்த சொத்துக்களை பற்றிய விவரங்கள் கூட தெரியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிலங்களை மீட்கும் முயற்சியில் இந்த கள ஆய்வு பணியை நடத்தி வருகிறோம். ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிலங்களை அரசு மூலம் இன்னும் 1 மாதத்திற்குள் மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்