கடந்த ஆண்டை விட நெல் சாகுபடி அதிகரிப்பு

திருமானூர் ஒன்றியத்தில் கடந்த ஆண்டை விட நெல் சாகுபடி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-02-13 22:15 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் டெல்டா பகுதியாகும். இந்த டெல்டா பகுதியில் கொள்ளிட கரையோரத்தில் உள்ள செம்பியக்குடி, குலமாணிக்கம், புதுக்கோட்டை, திருமானூர், ஏலாக்குறிச்சி, தூத்தூர் வரையில் மோட்டார் பாசனத்தை கொண்டு நெல் பயிரிடப்படுகிறது. மேலும், இலந்தைகூடம், கண்டிராதித்தம், திருவெங்கனூர் வரை கண்டிராதித்தம் பெரிய ஏரியில் கலக்கும் நந்தியாற்று வாய்க்கால் தண்ணீர் மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், பளிங்காநத்தம், வெங்கனூர், சன்னாவூர், கரைவெட்டி, பரதூர், கீழகாவட்டாங்குறிச்சி, கள்ளூர், கீழ குளத்தூர், சுள்ளங்குடி, கோவிலூர், காமரசவல்லி ஆகிய பகுதிகளில் புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்தை வைத்து நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

புள்ளம்பாடி வாய்க்காலில் பளிங்காநத்தம், வெங்கனூர், கரைவெட்டி உள்ளிட்ட பெரிய ஏரிகள், காமரசவல்லி சுக்கிரன் ஏரிகளில் தண்ணீர் திறக்கப்பட்டு அதன் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள சிறிய ஏரிகளும் நிரப்பப்பட்டு, வயல்களுக்கு நெல் சாகுபடிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் கடந்தாண்டு புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு முன்னதாக நிறுத்தப்பட்டது. இதனால் நெல் சாகுபடி மிகவும் குறைவாக அதாவது 3 ஆயிரத்து 567 ஹெக்டேர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், நடப்பாண்டில் புள்ளம்பாடி வாய்க் காலில் கடந்த ஆண்டை விட முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மேட்டூர் அணையின் நீர் மட்டத்தை விவசாயிகள் மனதில் கொண்டு நிரந்தரமாக தண்ணீர் வரும் என நம்பி தாமதமாக விவசாயம் செய்ய நேரிட்டாலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 4 ஆயிரத்து 348 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்டு நெல் பயிர்கள் அனைத்தும் கதிர் வரும் தருவாயில் உள்ளது.

பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் முழுமையாக விளைவதற்கு இன்னும் கூடுதலாக ஒரு மாதம் தண்ணீர் தேவைப்படும் நிலை உள்ளது. எனவே, இதனை தமிழக அரசும், சம்பந்தப்பட்ட துறையும் மனதில் கொண்டு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட, கடன் சுமை இல்லாமல் இருக்கவும், கடந்தாண்டை போல விவசாயிகள் இறப்பு நடைபெறாமல் இருக்கவும் புள்ளம்பாடி வாய்க்காலில் மேலும் 1 மாதத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக கடைசி நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து நெல் பயிர்களுக்கு பாய்ச்சிய சம்பவமும் இப்பகுதிகளில் அரங்கேறியுள்ளன. எனவே புள்ளம்பாடி வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க அரசும், சம்பந்தப்பட்ட துறையினரும் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்