ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் பெரம்பலூரில் ஏப்ரல் மாதம் நடக்கிறது

பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் ஏப்ரல் மாதம் நடக்கிறது. ராணுவ பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் வருகிற 24-ந்தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.;

Update: 2018-02-13 22:00 GMT
பெரம்பலூர்,

இந்திய ராணுவத்தில் சோல்ஜர் ஜெனரல், டெக்னிக்கல், நர்சிங் அசிஸ்டண்ட், கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட 6 வகை பணிகளுக்கு ஆள்சேர்க்கும் பணி, திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில் வருகிற ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை பெரம்பலூர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆள்சேர்ப்பு முகாமில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ராணுவ காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய நபர்கள் www.joinindianarmy.nic.in என்கிற இணையதளம் மூலம் வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் (மார்ச்) 25-ந்தேதி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்த நபர்களுக்கு மார்ச் 29-க்கு பிறகு இணையதளத்தில், பெரம்பலூர் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. இந்த அனுமதிச்சீட்டுடன் அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ்கள், கடந்த 6 மாதத்திற்குள் எடுக்கப்பட்ட 12 வண்ண புகைப்படங்களை கொண்டுவர வேண்டும். புகைப்படங்களின் கீழ் பகுதியில் பெயர் மற்றும் பிறந்ததேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

ராணுவ ஆள்சேர்ப்பு தொடர்பான சந்தேகங் களுக்கு திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தை 0431-2412254 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

ஆள்சேர்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று நடந்தது. தகுதியுடைய நபர்களுக்கு உடல்தகுதியை சரிபார்ப்பது, சான்றிதழ் சரிபார்ப்பது, ஓட்டப்பந்தயம் நடத்துவது உள்ளிட்டவை குறித்து திருச்சி மண்டல இயக்குனர் கர்னல் ரஐனீஷ் விளக்கி கூறினார்.

மேலும் ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பெரம்பலூர் விளையாட்டு மைதானத்தில் குவிய உள்ளதால் அவர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தற்காலிக தங்குமிட வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவது குறித்து கலெக்டர் கூறினார். இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்