மண்டியா மாவட்டத்தில் பரபரப்பு தடுப்பூசி போடப்பட்ட மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

மண்டியா மாவட்டத்தில், தடுப்பூசி போடப்பட்ட மேலும் ஒரு குழந்தை இறந்துள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.;

Update: 2018-02-13 21:30 GMT
ஹலகூர்,

மண்டியா மாவட்டத்தில், தடுப்பூசி போடப்பட்ட மேலும் ஒரு குழந்தை இறந்துள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி


மண்டியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, போலியோ பாதிப்பை தடுப்பதற்காக 1 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘பெண்டா வாசின்’ என்ற மருந்தைக் கொண்டு தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசி போடப்பட்டதில் சென்னகிரிதொட்டி கிராமத்தைச் சேர்ந்த பிறந்து 2 மாதமே ஆன புவன் மற்றும் பிரீதம் ஆகிய 2 குழந்தைகள் பரிதாபமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தன. இதற்கு டாக்டர்களின் கவனக்குறைவே காரணம் என்று கூறி குழந்தைகளின் பெற்றோரும், கிராம மக்களும் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் மண்டியா மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே குழந்தைகளுக்கு போடப்பட்ட அந்த மருந்து பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்விற்காக இமாச்சல பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வின் அறிக்கை கிடைத்த பிறகே குழந்தை இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 மாத பெண் குழந்தை

இந்த நிலையில் ‘பெண்டா வாசின்’ என்ற தடுப்பூசி போடப்பட்ட மற்றொரு குழந்தையும் பரிதாபமாக இறந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

மண்டியா மாவட்டம் ஹலகூர் அருகே மலவள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட ஹாட்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி ஹேமா. இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர்கள் நர்மதா என்று பெயரிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த குழந்தைக்கு ‘பெண்டா வாசின்’ தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடப்பட்டதில் இருந்து குழந்தை காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தது. மேலும் அதன் உடல் நிலையும் நாளுக்குநாள் மோசமடைந்து வந்தது. இதையடுத்து அந்த குழந்தை மண்டியா மிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி...

அங்கு அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தை நர்மதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இதனால் அந்த குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் அவர்கள் டாக்டர்களிடமும், மருத்துவ ஊழியர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தடுப்பூசி போடப்பட்டதாலேயே தங்களது குழந்தை இறந்துவிட்டதாக குற்றம்சாட்டினர்.

அதையடுத்து அவர்கள் குழந்தையின் உடலை ஆஸ்பத்திரியில் இருந்து பெற்றுக்கொண்டு சென்றுவிட்டனர்.

பரபரப்பு

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மிம்ஸ் ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஹனுமந்த் பிரசாத் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மோகன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள், “தற்போது இறந்துள்ள குழந்தை நர்மதாவுக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருந்தது. அதனால்தான் குழந்தை இறந்துவிட்டது. ஆனால் தடுப்பூசி போடப்பட்டதால்தான் குழந்தை இறந்துவிட்டதாக சிலர் கூறி வருகிறார்கள். அது தவறு” என்று கூறினர்.

நர்மதாவுடன் சேர்த்து தடுப்பூசி போடப்பட்டதால் இறந்துபோன குழந்தைகளின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் மண்டியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்