மகாசிவராத்திரி விழா: சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில் மகாசிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-02-13 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகாசிவராத்திரி விழா நேற்று நடந்தது. நேற்று பிரதோஷம் என்பதால் அனைத்து கோவில்களிலும் மாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவியத்தொடங்கினர். விழாவையொட்டி விடிய, விடிய 4 கால பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு கால பூஜையிலும் சாமிக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, குங்குமம், பழ வகைகள் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

கோவில்களில் விடிய, விடிய நடந்த இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவாய நம என்ற பக்தி கோஷத்தை எழுப்பி வழிபாடு நடத்தினார்கள். ஒவ்வொரு பூஜை முடிந்த பிறகும் பக்தர்களுக்கு பால், பஞ்சாமிர்தம், சுண்டல் உள்பட பல்வேறு வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தர்மபுரி நகரில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூனசாமி கோவிலில் நடந்த சிவராத்திரி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவில், கடைவீதி அம்பிகாபரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சிவன் கோவில், சாமியார்தோப்பு ஆதிலிங்கேஸ்வரர் கோவில், மதிகோன்பாளையம் ஈஸ்வரன் கோவில், சவுளூப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில் உள்பட அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய, விடிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அரூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலிலும் மகா சிவராத்திரியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரூர் வாணீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி வழிபாட்டில் நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காரிமங்கலம் மலைக்கோவில், கம்பைநல்லூர் தேசநாத ஈஸ்வரர் கோவில், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, லளிகம், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், மாரண்டஅள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கெலமங்கலம் அருகே பேவநத்தம் அருகே பிரசித்தி பெற்ற சிவ நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அதே போல இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு, 3 மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சிவ நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு சிவ நஞ்சுண்டேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடைபெற்றன. மேலும் அபிஷேகம், சாமிக்கு ஆராதனை நடந்தது.

இதில் காலை முதல் இரவு வரை திரளான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு முதல் விடிய, விடிய பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் இரவு 4 கால பூஜைகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு சாலை ஓரத்தில் ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டன. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்