அந்தேரியில், நிர்வாண நிலையில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த சிறுவனை போலீசார் மீட்டனர்.

மும்பை அந்தேரி மேற்கு, குடிசைப்பகுதியில் சிறுவன் ஒருவன் நிர்வாண நிலையில் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு இருப்பதாக நிஷித் மேத்தா என்பவர் டுவிட்டரில் மும்பை போலீசில் புகார் அளித்தார்.

Update: 2018-02-12 23:38 GMT
மும்பை,

போலீசார் உடனடியாக அந்தேரி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள குடிசைப்பகுதியில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த 8 வயது சிறுவனை மீட்டனர். விசாரணையில், சிறுவனின் தாய் அவனை கட்டி வைத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:-

சிறுவன் பள்ளி கூடத்திற்கு ஒழுங்காக செல்லாமல் அடம்பிடித்து வந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவனது தாய், சிறுவனை நிர்வாணப்படுத்தி அங்குள்ள ஒரு மரத்தில் கட்டிப்போட்டு தண்டனை கொடுத்தது தெரியவந்தது.

இதுபற்றி சிறுவனின் தாய் போலீசாரிடம் கூறுகையில், “எனது கணவர் இறந்துவிட்டார். நான் வீட்டு வேலை செய்து மகனை காப்பாற்றி வருகிறேன். அவனாவது படித்து நல்லநிலைக்கு வரவேண்டும் என நினைத்து தான் இப்படி தண்டனை கொடுத்தேன்” என கூறினார்.

இதையடுத்து போலீசார் இனிமேல் இப்படி செய்யக்கூடாது என சிறுவனின் தாயை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்