குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

உடையமழவராயன்பட்டி கீழத்தெரு பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-02-12 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கட்டகுடி மற்றும் திருநல்லூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், கட்டக்குடி மற்றும் திருநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி, சான்றிதழ் கேட்டு செல்லுபவர்களை தகாத வார்த்தையால் பேசி வருகிறார். இதனால் நாங்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம். எனவே இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மேலமுத்துக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,200-க்கும் மேற்பட்ட பழங்குடியின வகுப்பு மக்கள் வசிப்பதாக பழங்குடியின நல அலுவலக தகவல் தெரிவிக்கிறது. ஆனால் வருவாய்துறை அதிகாரிகளுக்கு இவர்கள் எந்த முகவரியில் வசிக்கின்றனர் என்ற விபரம் கிடைக்கவில்லை. எனவே தேர்தல் பிரிவு அதிகாரிகள் 1,200 பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சி வார்டு விபரங்கள் மற்றும் இவர்கள் தான் பழங்குடியினர் என்பதற்கான சான்றிதழ்களை வழங்கிய பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என கூறியிருந்தனர்.

அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தை சேர்ந்த பிரசவ உதவியாளர்கள் கொடுத்த மனுவில், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் நாங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பிரசவ உதவியாளராக பணியாற்றி வருகிறோம். இதற்கு மாதம் ரூ.ஆயிரத்து 500 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. எங்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறி பலமுறை எங்களிடம் சான்றிதழ்கள் மற்றும் விபரங்களை வாங்கி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்தஒரு பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் ரூ.ஆயிரத்து 500 மட்டும் சம்பளமாக வழங்கி வருகின்றனர்.

எனவே எங்கள் குடும்பத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

குளத்தூர் தாலுகா உடையமழவராயன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், உடையமழவராயன்பட்டி கீழத்தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் தற்போது அந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படவில்லை. இதனால் எங்கள் பகுதிக்கு கடந்த பல நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் தண்ணீரை தேடி பல இடங்களுக்கு அலையவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு தேவையான குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்