பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். 11 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-12 22:45 GMT
சேலம்,

பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், அதை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்டக்குழு செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் மோகன், மோகனசுந்தரம், தங்கவேலு, சந்திரமோகன் உள்பட கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர், அவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 11 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், மாலையில் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

இந்த மறியல் போராட்டம் குறித்து நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில், தமிழக அரசு பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பஸ் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டம் தொடரும், என்றார். 

மேலும் செய்திகள்