விடுதி அறையில் சிறுமியை அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி போலீஸ்காரர் கைது

சென்னையிலிருந்து காரில் அழைத்து வந்த சிறுமியை விடுதி அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-02-12 23:15 GMT
வேலூர்,

சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42). இவர் சென்னையில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றினார். பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவர் வசிக்கும் பகுதியில் துணி சலவை செய்யும் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் 2-வது மகளுக்கு 13 வயதாகிறது. இவர் 8-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். அந்த சிறுமியும் செல்வகுமாரை தந்தை ஸ்தானத்தில் பார்த்து பழகி உள்ளாள்.

இந்த நிலையில் அந்த 13 வயதுடைய சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சென்னையில் இருந்து வேலூருக்கு நேற்று முன்தினம் மாலையில் காரில் அழைத்து வந்துள்ளார். வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

அன்று நள்ளிரவில் செல்வகுமார் மதுகுடித்துள்ளார். போதை தலைக்கேறியதும் செல்வகுமார் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். சுதாரித்துக்கொண்ட அந்த சிறுமி கழிவறைக்கு சென்று உள்ளே பூட்டிக் கொண்டாள். அவர் கழிவறைக்கு செல்லும்போது செல்வகுமாரின் செல்போனையும் அவருக்கு தெரியாமல் எடுத்துச் சென்று விட்டாள்.

கழிவறையில் இருந்து அவர் அவசர உதவி எண்ணாண 100-ஐ தொடர்பு கொண்டு, “வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் உள்ள அந்த தங்கும் விடுதியின் பெயரை கூறி, தன்னிடம் செல்வகுமார் தவறாக நடக்க முயற்சி செய்கிறார். நான் கழிவறையில் பதுங்கி உள்ளேன். எனக்கு பயமாக உள்ளது... உடனடியாக காப்பாற்றுங்கள்” என்று கதறினாள்.

உடனடியாக சென்னை கட்டுப்பாட்டு அறை போலீசார் வேகமாக செயல்பட்டனர். அவர்கள் வேலூர் வடக்கு போலீசாரை தொடர்பு கொண்டு கூறினர். அதைத்தொடர்ந்து வடக்கு போலீசார் உடனடியாக அந்த தங்கும் விடுதிக்கு சென்றனர். இதற்கிடையே சிறுமி கழிவறை சென்று வெகு நேரமாகியும் திரும்பாததால் செல்வகுமார் கழிப்பறைக்கு சென்றார். கதவு பூட்டப்பட்டிருந்ததால் கதவை தட்டியவாறு சிறுமியிடம், ‘கதவை திற’...‘கதவை திற’ என்று மிரட்டல் விடுத்தவாறு கத்தினார்.

மேலும் தனது செல்போன் சிறுமியிடம் உள்ளது அவருக்கு தெரியவந்தது. அப்போது விடுதிக்கு போலீசார் வந்தனர். உடனே அவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

தங்கும் விடுதிக்கு சென்ற போலீசார் அந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் செல்வகுமாரின் செல்போனையும், அவரது காரையும் பறிமுதல் செய்து தப்பியோடிய அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் சுற்றித்திரிந்த அவரை நேற்று காலை பிடித்தனர். வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்