நீதிமன்ற வளாகத்தில் ரூ.27½ லட்சத்தில் மருத்துவமனை தலைமை குற்றவியல் நீதிபதி தகவல்

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.27½ லட்சத்தில் மருத்துவமனை கட்டப்பட உள்ளது என்று தலைமை குற்றவியல் நீதிபதி நாராஜா கூறினார்.

Update: 2018-02-12 22:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் தற்போது நீதிமன்ற வளாகத்தில் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நீதிமன்ற வளாகத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி மகிழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி ராஜ்மோகன், தலைமை குற்றவியல் நீதிபதி நாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் தலைமை குற்றவியல் நீதிபதி நாராஜா கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம், தபால் நிலையம் செயல்படுகின்றனர். இந்த நிலையில் இங்கு வரும் மக்களுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்தே இயங்கும் வகையில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

மேலும் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.27½ லட்சத்தில் மருத்துவமனை கட்ட சுகாதாரத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பணி இன்னும் 10 அல்லது 15 நாட்களில் தொடங்கப்பட உள்ளது.

இந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ரத்த பரிசோதனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கொண்டதாக இந்த மருத்துவமனை அமைய உள்ளது. இந்த மருத்துவமனையின் மூலம் சுற்றவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள், நீதிமன்ற ஊழியர்கள் பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்