செல்லூர் கிராமத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் திடீர் ஆய்வு

செல்லூர் கிராமத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Update: 2018-02-12 22:15 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகில் செல்லூர் கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்துக்கு அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று அதிகாரிகளுடன் சென்று, திடீர் ஆய்வு மேற்கொண்டார். வீதி வீதியாக பார்வையிட்ட அமைச்சர், தெற்கு வீதியில் உள்ள வீடுகளில் கழிப்பறை வசதிகளை செய்யவும், குடிசை வீடுகளை கல்வீடுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளிடம் கூறினார்.

அப்போது, விடுபட்ட வீடுகளுக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும், ஏழை குடும்பங்களுக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டுகள், வீடுகளுக்கு பட்டா மாற்றுச்சான்றிதழ் வழங்கவும் அமைச்சரிடம் கிராம மக்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் கமலக்கண்ணன், கிராம இளைஞர்கள், மன்றம் அமைத்து அதன் மூலம் மக்களின் குறைகளை மாவட்ட கலெக்டரிடம் முறையிடலாம் என்றார்.

இந்த ஆய்வின்போது சார்பு கலெக்டர் விக்ராந்த் ராஜா, தாசில்தார் முத்து, வட்டார வளர்ச்சி அதிகாரி ரேவதி ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்