கடலில் மீன்பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்

புதுவை கடலில் மீன் பிடித்தபோது எழுந்த ராட்சத அலையால் படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயமானார்.

Update: 2018-02-12 21:45 GMT
புதுச்சேரி,

புதுவை குருசுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது40) மீனவர். நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். இவருடன் மதி, முத்து உள்பட 3 பேர் சென்றனர். அவர்கள் கடலுக்குள் 10 நாட்டிக்கல் மைல் தொலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவு சுமார் 2 மணியளவில் கடலில் எழுந்த ராட்சத அலையில் படகில் இருந்த ரமேஷ் கடலுக்குள் விழுந்தார். இதைப் பார்த்ததும் படகில் இருந்த மற்ற 3 பேரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் கடலில் குதித்து ரமேசை தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து புதுச்சேரி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கொண்டாபாலாஜி ராவ் மற்றும் போலீசார் ரோந்து படகில் கடலுக்குச் சென்று மீனவர்களுடன் சேர்ந்து ரமேசை தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ரமேசுக்கு கற்பகம் என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 

மேலும் செய்திகள்