அரசு பொது தேர்வுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

அரசு பொது தேர்வுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.

Update: 2018-02-12 23:00 GMT
காஞ்சீபுரம்,

அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பிற்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் தொடங்குகிறது. 10-ம் வகுப்பிற்கான தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 20-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்பிற்கான தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 3-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வரையிலும், பிளஸ்-2 வகுப்புக்கான தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரையிலும் நடக்கிறது.

இந்த தேர்விற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.

அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வுக்கு 349 பள்ளிகளில் இருந்து 119 தேர்வு மையங்களில் 49 ஆயிரத்து 973 மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 தேர்வுக்கு 360 பள்ளிகளில் இருந்து 119 தேர்வு மையங்களில் 47 ஆயிரத்து 300 மாணவ-மாணவிகளும், 10-ம் வகுப்பு தேர்வுக்கு 610 பள்ளிகளில் இருந்து 157 தேர்வு மையங்களில் 52 ஆயிரத்து 895 மாணவ-மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர்.

ஆயுதம் ஏந்திய போலீசார்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்வுகள் ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சிறப்பு கண்காணிப்பு குழுவும், காவல் துறையின் மூலம் வினா-விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் தேர்வு நடைபெறும் நாட்களில் பாதுகாப்பிற்காக நியமிக்க பட உள்ளனர்.

தேர்வு நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கிட உறுதி செய்யவேண்டும். பொது தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் சென்றுவர பஸ் வசதி செய்து தரவேண்டும். பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதி மற்றும் சுற்றுப்புற தூய்மை வசதிகளை செய்துதர நகராட்சி ஆணையர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது, சப்-கலெக்டர்கள் ஜெயசீலன், கிள்ளி சந்திரசேகர், உதவி கலெக்டர் (பயிற்சி) ரத்தினா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி, வருவாய் கோட்ட அதிகாரிகள் ராஜி, ராஜேந்திரன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர், நகராட்சி ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்