சாதாரண பஸ்களில் ‘எக்ஸ்பிரஸ்’ என ஸ்டிக்கர் ஒட்டி கூடுதல் கட்டண வசூல் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

சாதாரண பஸ்களில் ‘எக்ஸ்பிரஸ்‘ என ஸ்டிக்கர் ஒட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2018-02-12 23:00 GMT
மதுரை,

திருச்சியை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் புறநகர், நகர், சாதாரண கட்டணம், விரைவு, டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், குளிர்சாதன வசதி என பல்வேறு வகைகளில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த மாதம் 20-ந்தேதி அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் மோட்டார் வாகன விதிகள் பின்பற்றப்படவில்லை.

தமிழகத்தில் சாதாரண பஸ்களிலும் விரைவு பஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்கின்றன. அவற்றில் விரைவு பஸ்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தனியார் பஸ்களில் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டப்படி விரைவு பஸ்களில் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு நிறுத்தம் மட்டுமே இருக்க வேண்டும். கட்டண உயர்வு விகிதப்படி திருச்சி-மதுரை செல்வதற்கு ரூ.102-க்கு பதிலாக ரூ.120 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு கோட்டத்திலும் அரசு பஸ்களில் வெவ்வேறு விதமான கட்டணம் வசூலிக்கப்படு கிறது.

எனவே சாதாரண பஸ்களையும், விரைவு பஸ்களையும் அடையாளம் காணும் வகையில் சாதாரண பஸ்களின் நிறத்தை மாற்றவும், அதுவரை உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை வசூலிக்க தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனு குறித்து தமிழக போக்குவரத்து துறை செயலாளர், கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். 

மேலும் செய்திகள்