நெல்லை கோர்ட்டில் விசாரணையின் போது தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

நெல்லை கோர்ட்டில் விசாரணையின் போது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-02-12 23:00 GMT
நெல்லை,

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி எட்வர்டு சவரிமுத்து (வயது 65). இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தாசன் என்பவருக்கு ரூ.41 ஆயிரத்து 500 கடன் கொடுத்து இருந்தார். அதற்கு ஈடாக அவர் ஒரு வங்கி காசோலையை சவரிமுத்துவுக்கு கொடுத்து இருந்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

இதனால் மனம் வெறுப்படைந்த சவரிமுத்து நெல்லை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தாசன் இறந்து விட்டார். இதனால் தனக்கு பணம் கிடைக்காது என நினைத்து சவரிமுத்து கவலை அடைந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சவரிமுத்துவும் நெல்லை கோர்ட்டுக்கு வந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மாலதி, விசாரணையை வேறு தேதிக்கு தள்ளி வைத்தார். அப்போது திடீரென்று சவரிமுத்து கண் இமைக்கும் நேரத்தில் பிளாஸ்டிக் பையில் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து கோர்ட்டில் நின்ற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் நின்ற வக்கீல் லட்சுமண ரமேஷ் என்பவர் சவரிமுத்துவை தடுத்து நிறுத்தினார்.

தகவல் அறிந்த பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். சவரிமுத்துவை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், தலைமை குற்றவியல் நீதிபதி ராஜமாணிக்கம், சட்ட பணிகள் ஆணையக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

நெல்லை கோர்ட்டில் விசாரணையின் போது தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்