ஜெயலலிதா உருவப்படம் திறப்பால் சட்டசபையின் புனிதம் கெட்டு விட்டது - டாக்டர் ராமதாஸ் பேட்டி

ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டதால் சட்டப்பேரவையின் புனிதம் கெட்டு விட்டது என்று ஈரோட்டில் டாக்டர் ராமதாஸ் கூறினார்.;

Update: 2018-02-12 22:45 GMT
ஈரோடு,

ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று ஈரோடு அசோகபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று ஈரோடு வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் பெருமைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில் பினாமி எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பே இந்த அரசின் மீது 25 வகையான ஊழல்கள் குறித்து பா.ம.க. சார்பில் கவர்னரிடம் புகார் தெரிவித்தோம். அதை வரிக்கு வரி படித்து விட்டு நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் கூறினார்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஊழல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தை அவசர அவசரமாக திறந்து இருக்கிறார்கள். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே அவசரமாக படத்தை சபாநாயகர் திறந்து வைத்திருக்கிறார். ஊழல் குற்றத்துக்காக 2 முறை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஊழல் செய்ததற்காக 2 முறை சிறையில் அடைக்கப்பட்டவர் ஜெயலலிதா. இவர் இப்போது உயிருடன் இருந்திருந்தாலும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில்தான் இருந்திருப்பார். இப்படி ஊழலுக்காக தண்டிக்கப்பட்டு, ஊழலின் மொத்த உருவமாக இருந்த ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. கண்டிக்கத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் மகாத்மாகாந்தி, அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், ராஜாஜி, திருவள்ளுவர், காமராஜர், அண்ணா, காயிதேமில்லத், முத்துராமலிங்கதேவர், எம்.ஜி.ஆர். ஆகிய 10 தலைவர்களின் உருவப்படங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் 9 படங்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், அண்டை மாநில கவர்னர்களால் திறக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சிலையை ஜெயலலிதா திறந்து வைத்தார். தற்போது ஜெயலலிதாவின் படத்தை சபாநாயகர் திறந்து வைத்திருக்கிறார். இதுபற்றி யார் என்ன கூறினாலும், ஊடகங்களில் பேசினாலும் படத்தை திரும்ப எடுக்கப்போவதில்லை.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இதுபோல் சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன் மீது விசாரணை நடத்த வேண்டும். அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்து விசாரணை நடத்தினால் ஊழலில் அமைச்சர்களின் பங்கு குறித்த உண்மை வெளியே வரும்.

இதுபோல் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தரும், பேராசிரியர் பணியிடங்களுக்கு பணம் கொடுக்கவேண்டும் என்று துணிச்சலாக கையூட்டு வாங்குவதாக தகவல்கள் வருகின்றன.

2015-ம் ஆண்டு 5 மாநிலங்களில் எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவன மருத்துவமனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதில் ஒன்று தமிழ்நாடு. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, தஞ்சாவூர், மதுரை, பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் ஒரு இடத்தை மத்திய அரசு தேர்வு செய்து பணிகளை தொடங்கி இருக்க வேண்டும். பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பணிகள் தொடங்கி விட்டன. எய்ம்ஸ் மருத்துவமனை விஷயத்தில் திட்டத்தை செயல்படுத்த தாமதிக்கும் மத்திய-மாநில அரசுகளை கண்டிக்கிறேன்.

கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு மாநில அளவிலான ஒப்பந்தம் என்ற அறிவிப்பால் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். உடனடியாக மண்டல அளவிலான அல்லது தேசிய அளவிலான ஒப்பந்தம் நடத்தப்பட்டு, போராட்டத்தை நிறுத்தி, பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.

இனி எந்த காலத்திலும் பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காது. பா.ம.க. தலைமையை ஏற்று வரும் மற்றகட்சிகளுடன் கூட்டணி உண்டு.

இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மேலும் செய்திகள்