தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.;

Update: 2018-02-12 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 55). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள புளிஞ்சேரி என்ற இடத்தில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு பழைய டயர்கள், ரப்பர்கள் அனைத்தையும் பவுடராக மாற்றி, பொம்மை, தரைவிரிப்பான் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த தொழிற்சாலையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று பிற்பகல் 1 மணி அளவில் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் மதிய உணவிற்காக வெளியே சென்றனர்.

1.30 மணி அளவில், தொழிற்சாலையின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டுள்ள பழைய டயர்களில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராமல் வேகமாக பரவியது. இதனால் தொழிற்சாலை முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து ஓசூர், ராயக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து மேலும், 2 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

மேலும் குருபரப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டிராக்டர்களில் இருந்தும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாலை 4 மணி வரை 90 சதவீத தீ கட்டுக்குள் வந்தது. இந்த விபத்தில் ரப்பர் பவுடராக மாற்றும் உயர்தொழில்நுட்பம் கொண்ட எந்திரம், ஒரு இருசக்கர வாகனம், பழைய டயர்கள் உள்ளிட்டவை தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்து நடந்த இடத்தில் குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனதாக கூறப்படுகிறது. நேற்று இரவு தீ கட்டுக்குள் வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்