கன்னியாகுமரியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை

கன்னியாகுமரியில் நேற்று தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

Update: 2018-02-12 23:00 GMT
கன்னியாகுமரி,

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க அடிக்கடி ‘சஜாக் ஆபரேசன்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி கடலில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இதில் குமரி மாவட்ட கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் சுடலை மணி, ஏசுராஜ், சரவண முருகன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இவர்கள் 3 குழுக்களாக பிரிந்து 3 அதிநவீன படகுகளில் ரோந்து சென்றனர். சின்னமுட்டம் முதல் அம்மாண்டிவிளை,  முட்டம் வரை ஒரு குழுவினரும், சின்னமுட்டம் முதல் கூடங்குளம் வரை இன்னொரு குழுவினரும், சின்னமுட்டம் முதல் உவரி வரை மற்றொரு குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுபோல், கடலோர பாதுகாப்பு குழும சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனைகள் நடந்தன. அஞ்சுகிராமம், பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம், குளச்சல் உள்பட 11 சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை நடந்தது.

கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரையில் 48 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கும் கடலோர காவல் குழும போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்