கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஊழல் செய்வதிலேயே குறியாக உள்ளது

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஊழல் செய்வதிலேயே குறியாக உள்ளது என்று எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

Update: 2018-02-12 00:04 GMT
பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மாநில தலைவருமான எடியூரப்பா பெங்களூரு காந்திநகரில் உள்ள லட்சுமணபுரி குடிசை பகுதியில் தங்கினார். அங்கு மக்கள் படும் கஷ்டங்களை அவர் கேட்டு அறிந்தார். நேற்று முன்தினம் இரவு அங்கேயே படுத்து தூங்கினார். நேற்று காலை எழுந்து காபி குடித்து தின பத்திரிகைகளை படித்தார். மக்களுடன் உரையாடி அவர் உணவு உண்டார். அவருடன் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் உள்ளிட்டோர் இருந்தனர். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பா.ஜனதா கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-

முதல்-மந்திரி சித்தராமையா ஒரு முறை கூட குடிசை பகுதி வாழ் மக்களின் கஷ்டங்களை கேட்டு அறியவில்லை. இந்த தொகுதியை சேர்ந்த தினேஷ் குண்டுராவ் எம்.எல்.ஏ.வும் இந்த பகுதிக்கு வந்து உங்களுடன் தங்கி குறைகளை கேட்டு அறியவில்லை. பிரதமர் மோடியை குறை சொல்வதிலேயே சித்தராமையா காலத்தை விரயம் ஆக்குகிறார்.

தலித் மக்களுக்கு நீதி பெற்று தந்த டாக்டர் அம்பேத்கர், தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட பாபுஜெகஜீவன்ராம் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சி அவமானத்தை இழைத்தது. ஆனால் காங்கிரசார் இப்போது தலித் மக்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். இத்தகையவர்களிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை.

நாட்டில் உள்ள வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. 2020-ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகளை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பெண் குழந்தைகளைகளின் பாதுகாப்புக்காக பாக்யலட்சுமி திட்டத்தை அமல்படுத்தினேன்.

ஆனால் இப்போது ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு ஊழல் செய்வதிலேயே குறியாக உள்ளது. தலை கெட்டுவிட்டது போல் சித்தராமையா பேசுகிறார். குடிசைவாழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது அவசியம். இந்த மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இதற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியை பயன்படுத்த வேண்டும். வெறும் போஸ்டர்களை போட்டு விளம்பரம் கொடுத்தால் மட்டும் போதாது. ஈடுபாட்டு உணர்வுடன் மாநில அரசு பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

மேலும் செய்திகள்