மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்ற வேண்டும்

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.

Update: 2018-02-12 00:01 GMT

பெங்களூரு,

கொப்பல் மாவட்டம் கரடகி நகரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:–

பிரதமர் மோடி ஆட்சியின் பதவி காலம் முடிவுக்கு வருவதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்னும் இருக்கும் சிறிது காலத்திலாவது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்ற வேண்டும். பதவி காலம் முடிந்து தேர்தலை சந்திக்கும்போது என்ன செய்தோம் என்பதை அவர் மக்களுக்கு சொல்ல வேண்டும். பசவண்ணர் கொள்கையின்படி சித்தராமையா நடந்துகொள்கிறார்.

வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மோடி தோல்வி அடைந்துவிட்டார். பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை. அதுபற்றி பேசுவதை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியை குறை கூறுவதிலேயே மோடி கவனம் செலுத்துகிறார். உலகில் இரண்டு விதமான ஆட்சி முறைகள் நடக்கின்றன. ஒன்று தொழில் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக செயல்படுவது, மற்றொன்று ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுவது ஆகும்.

இந்திய தொழில் முதலீட்டாளர்களின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது. இதை மோடி அரசு மெதுவாக தள்ளுபடி செய்து வருகிறது. சமூக நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.55 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது. ஆனால் 50 சதவீதத்தை கர்நாடகத்தில் சித்தராமையா அரசு செலவிட்டுள்ளது.

நாட்டில் தகவல் தொழில்நுட்ப தொழிலை ராஜீவ்காந்தி அறிமுகம் செய்தார். இதை பா.ஜனதா அரசு நிராகரித்தது. இப்போது தகவல் தொழில்நுட்ப மென்பொருள் உற்பத்தியில் கர்நாடகம் மிக பிரபலமாக திகழ்கிறது. உலக அரங்கில் இந்தியாவை கர்நாடகம் பெருமையடைய செய்துள்ளது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

மேலும் செய்திகள்