கிணற்றுக்குள் விழுந்தவர் மீது சுவர் இடிந்து விழுந்ததால் பரிதாப சாவு

கிணற்றுக்குள் விழுந்தவர் மீது சுவர் இடிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். கயிறு கட்டி மீட்க முயன்ற தம்பியின் கண்முன்னே இந்த சோகம் நடந்துள்ளது.

Update: 2018-02-11 23:30 GMT
தூத்துக்குடி,

புதுக்கோட்டை அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்ற ஜெயபாலன். இவருடைய மகன் கவுதம் (வயது 19). ஐ.டி.ஐ. முடித்து உள்ள கவுதம், கூலி வேலைகளுக்கு சென்று வந்தார்.

நேற்று காலையில் கவுதம் தன்னுடைய தம்பி சந்திரலிங்கம், வனராஜா ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தர்பூசணி விதைகளை விதைப்பதற்காக சென்றார். அவர்கள் விதை விதைத்த பிறகு அந்த தோட்டத்தில் கிணற்றின் அருகே உள்ள தொட்டியில் கை, கால்களை கழுவ சென்றனர். கவுதம் தொட்டியின் மீது ஏறி நின்று கை கழுவினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கவுதம் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அந்த கிணற்றில் ஆழம் குறைவாக இருந்தது. அதே நேரத்தில் சகதி அதிகமாக இருந்தது. இதனால் கவுதமால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை.

இதனால் கிணற்றின் மேலே இருந்த சந்திரலிங்கம், வனராஜா ஆகியோர் கயிற்றை கட்டி கவுதமை மீட்க முயன்றனர். அப்போது கிணற்றின் சுவர் முழுவதும் இடிந்து கவுதம் மீது விழுந்தது.

இதில் கவுதம் படுகாயம் அடைந்து கிணற்றுக்குள் பிணமானார். தம்பி சந்திரலிங்கம் கண்முன்னே இந்த சோக சம்பவம் நடந்து முடிந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் மற்றும் சிப்காட் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கவுதமின் உடலை மீட்க போராடினர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உடலை மீட்டனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்