கிணற்றில் மூழ்கி இறந்த மாணவர் சாவில் பள்ளிக்கூடத்தில் உறவினர்கள் முற்றுகை

பாளையங்கோட்டையில் கிணற்றில் மூழ்கி இறந்த பிளஸ்-2 மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவர் படித்த பள்ளிக்கூடத்தில் உறவினர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;

Update: 2018-02-11 23:17 GMT
நெல்லை,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த லட்சுமணன் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 18). இவர் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி. பாளையங்கோட்டையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். முத்துகிருஷ்ணன் நேற்று முன்தினம் வீரமாணிக்கபுரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது அவர் நீரில் மூழ்கி பலியானார்.

அவரது உடலை பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மானாமதுரையில் இருந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் நெல்லை வந்தனர். அவர்கள் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று முத்துகிருஷ்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஒரு புகார் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் முத்துகிருஷ்ணன் படித்த பள்ளிக்கூடத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது முத்துகிருஷ்ணன் உறவினர்கள் கூறும் போது, “முத்துகிருஷ்ணனை பள்ளிக்கூடத்தில் நன்றாக கவனிக்கவில்லை. அவரது சாவில் சந்தேகம் இருக்கிறது. முத்துகிருஷ்ணனுக்கு நீச்சல் நன்றாக தெரியும். அவர் சிறந்த விளையாட்டு வீரர். எனவே கிணற்றில் மூழ்கி இறந்தார் என்பதை ஏற்க முடியாது. அவரை கொலை செய்து கிணற்றில் தூக்கி வீசினார்களோ? என்ற சந்தேகம் இருக்கிறது. இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்“ என்றனர்.

இதைத்தொடர்ந்து முத்துகிருஷ்ணன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து முத்துகிருஷ்ணன் படித்த பள்ளிக்கூடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்