மான்கூர்டில் தீ விபத்து 60 குடோன்கள், வீடுகள் எரிந்து நாசம்

மான்கூர்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 60 குடோன்கள், வீடுகள் எரிந்து நாசமாகின.

Update: 2018-02-11 23:11 GMT
மும்பை,

மும்பை பெருநகரம் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக பெரும் தீ விபத்துகளை சந்தித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் மும்பையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

மும்பை மான்கூர்டில் உள்ள காட்கோபர்- மான்கூர்டு லிங்க் சாலையோரத்தில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு பழைய பொருட்களை சேகரித்து வைக்கும் குடோன்களும் அதிகளவில் உள்ளன. இந்த குடோன்களில் பிளாஸ்டிக் பேரல்கள், பாட்டில்கள், மரச்சாமான்கள், ரசாயன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை 6 மணியளவில் இங்குள்ள ஒரு குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சிறிது நேரத்தில் தீ மளமளவென அருகில் உள்ள குடோன்களுக்கும் பரவியது. கரும்புகையை கக்கியபடி தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதன் காரணமாக அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. தீ வேகமாக எரிந்ததால் குடிசைவாசிகள் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

இந்தநிலையில், தீ அருகில் உள்ள குடிசை வீடுகளுக்கும் பரவியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 20 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

நாலாபுறமும் சுற்றி நின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். குடோன்களில் பிளாஸ்டிக், மரச்சாமான், ரசாயன பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு படையினர் திணறினார்கள்.

4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காலை 10 மணியளவில் தான் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் அங்கிருந்த 60 குடோன்கள், வீடுகள் மற்றும் அவற்றில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டதாக கூறப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக யாரும் தீ விபத்தில் சிக்கவில்லை. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்துக்கு முன்னதாக சாக்கிநாக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்