ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை சாவு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை மரக்கட்டையின் மீது மோதியதில் பரிதாபமாக இறந்தது.

Update: 2018-02-11 23:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா திருநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 656 காளைகளும், 257 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 62 பேர் காயமடைந்தனர்.

இதற்கிடையே, வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் வெளியேறும் பகுதியில் இருந்த பார்வையாளர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் போலீசார் மீது கல்லை வீசினார். இதில் போலீஸ்காரர் கென்னடி (வயது 33) என்பவர் காயமடைந்தார்.

இதேபோல வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளை அங்கிருந்த பலகார கடையில் கொதித்து கொண்டிருந்த எண்ணெய் பாத்திரத்தை தட்டிவிட்டு சென்றது. இதில், கடையில் பலகாரம் சாப்பிட்டு கொண்டிருந்த அருள் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்த்து வந்த ‘கொம்பன்’ என்ற காளையும் பங்கேற்றது. இந்த காளை பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளில் பிடிபடாமல் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது. நேற்று அவிழ்த்து விடப்பட்ட இந்த காளை வாடிவாசலில் இருந்து வெளியே வரும்போது மரக்கட்டையின் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கொம்பன் காளை பரிதாபமாக இறந்தது.

இதைத்தொடர்ந்து இறந்த கொம்பன் காளையை அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர்கள், அங்கிருந்து தூக்கி சென்று இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

மேலும் செய்திகள்