கிரானைட் அதிபர் வீட்டில் ரூ.62 லட்சம், 20 பவுன் நகை திருட்டு போலீசார் விசாரணை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிரானைட் அதிபர் வீட்டில் ரூ.62 லட்சம் மற்றும் 20 பவுன் நகை ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-02-11 23:00 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ராமியம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 58), தொழில் அதிபர். இவருடைய மகன்கள் விமல் (30), பிரபாகரன் (28). தந்தையும், மகன்களும் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் கிரானைட் குவாரியும், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தாதனூரில் கிரானைட் கற்கள் அறுக்கும் நிறுவனமும் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 9-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றனர்.

பின்னர் விஜயகுமார் குடும்பத்தினர் சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்தனர். அப்போது வீட்டில் உள்ள பீரோ திறந்தும், அதில் இருந்த பொருட்கள் சிதறியும் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் 2 அறைகளில் இருந்த ரூ.62 லட்சம் மற்றும் 20 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக பிரபாகரன் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மர்ம ஆசாமிகள் சமையல் அறையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பீரோவில் இருந்த பணம், நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர். மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்தனர். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள் குறித்தும், தொழில் அதிபரின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். தொழில் அதிபர் வீட்டில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்