பூச்சிகளை கட்டுப்படுத்த மானிய விலையில் சூரிய விளக்குப்பொறி, வேளாண் உதவி இயக்குனர் தகவல்

பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் சூரிய விளக்குப்பொறிகள் மானிய விலையில் வழங்கப்படுவதாக பழனி வேளாண் உதவி இயக்குனர் மீனாகுமாரி தெரிவித்தார்.

Update: 2018-02-11 20:46 GMT
பழனி,

பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குவது பூச்சிகள் ஆகும். இவற்றை இயற்கையான முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பழனி வேளாண் உதவி இயக்குனர் மீனாகுமாரி கூறியதாவது:-

விதைப்பு பருவம் முதல் பயிர் அறுவடை பணிகள் வரை பூச்சிக்கட்டுப்பாடு மிக அவசியமான ஒன்றாகும். முன்பெல்லாம் பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன.

இதனால் பயிர்களும் பாதிப்படைவதாக விவசாயிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை குறைத்து இயற்கையான முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சூரிய விளக்குப்பொறி மூலம் பூச்சிகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூரிய விளக்குப்பொறி பகல் நேரத்தில் சூரியனிடம் இருந்து சக்தியை பெற்று தனக்குள் சேமிக்கும். பின்னர் இரவில் அந்த சக்தியை பயன்படுத்தி பூச்சிகளை கவர்ந்து இழுத்து அழிக்கும் தன்மை கொண்டது.

இதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகள், இலை சுருட்டு புழு, தண்டு துளைப்பான், தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, அசுவினி, பழ வண்டு ஆகியவற்றை கவர்ந்து இழுத்து அழிக்க முடியும். இந்த சூரிய மின்விளக்குப்பொறியை நெல், கரும்பு, காய்கறி, மா, கொய்யா, தென்னை ஆகியவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்படுத்தலாம்.

இதன் விலை ரூ.4,450 ஆகும். அரசு ரூ.2 ஆயிரம் மானியம் வழங்குகிறது. இதனை பெற விரும்பும் விவசாயிகள் பழனி வேளாண் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்