ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை

ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2018-02-11 21:30 GMT
ஈரோடு,

ஈரோடு பழையபாளையம் இந்து நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி ஜெயக்கொடி (வயது 65). இவர்களுக்கு நித்தியசெல்வி, லாவண்யா என்ற 2 மகள்களும், சதீஷ் என்ற மகனும் உள்ளனர்.

நித்தியசெல்வி திருமணம் ஆகி ஈரோடு வளையக்கார வீதியிலும், லாவண்யா திருமணம் ஆகி பெங்களூருவிலும் வசித்து வருகிறார்கள். சதீஷ் லண்டனில் பணி புரிந்து வருகிறார்.

ஜெயக்கொடி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 13 வீடுகள் உள்ளன. இவர் முதல் தளத்தில் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜெயக்கொடி வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருவில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது கண்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அதிர் ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கும், ஈரோட்டில் உள்ள ஜெயக்கொடியின் மகள் நித்தியசெல்விக்கும் தகவல் தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் போலீசாரும், நித்தியசெல்வியும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வீட்டுக்குள் சென்று போலீசார் பார்வையிட்டபோது அங்கிருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அங்கும், இங்குமாக சிதறிக்கிடந்தன. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவம் நடந்த வீட்டுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாக இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

இதற்கிடையே இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெங்களூருவில் இருந்து ஜெயக்கொடியும் ஈரோட்டுக்கு வந்தார். உடனே அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை துணிகரமாக திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்