டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 74 ஆயிரத்து 62 பேர் எழுதினர்

திருச்சி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வினை 74 ஆயிரத்து 62 பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 14 ஆயிரத்து 11 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2018-02-11 22:45 GMT
திருச்சி,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தப்படும் குரூப்- 4 தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 88 ஆயிரத்து 73 பேர் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களில் 298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வாளர்கள் நேற்று காலை 9 மணிக்கே தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால் திருச்சி நகரில் உள்ள அனைத்து தேர்வு மையங்களும் காலையில் இருந்தே பரபரப்புடன் காணப்பட்டது.

விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், கருவிகள் உள்பட எந்த பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஹால்டிக்கெட்டுடன் கூடிய அடையாள அட்டையை மட்டும் காட்டிவிட்டு தேர்வு எழுதும் அறைக்குள் சென்றார்கள். திருச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 14 ஆயிரத்து 11 பேர் நேற்று தேர்வு எழுத வரவில்லை.

இதனால் 74 ஆயிரத்து 62 பேர் மட்டும் தேர்வினை எழுதினார்கள். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் முதன்மை கண்காணிப்பாளர்கள் தலைமையில் அதிகாரிகள் தேர்வு எழுதியவர்களை கண்காணித்தனர். இது தவிர 20 பறக்கும் படை குழுவினரும் ரோந்து சுற்றிய வண்ணம் இருந்தனர். அனைத்து தேர்வு மையங்களின் முன்பாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

பெரும்பாலான தேர்வு மையங்களில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர். பெண்களுக்கு உதவியாக அவர்களது கணவன்மார் மற்றும் பெற்றோர்கள் வந்து இருந்தனர். தேர்வு எழுதி முடித்து விட்டு வரும்வரை அவர்கள் வெளியில் மரத்தடியில் காத்து இருந்தனர். கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண்கள் தங்களது கணவர் அல்லது தாய், தந்தையிடம் குழந்தையை கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றனர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி திருச்சி ஜெகன்மாதா, ஆர்.சி., கி.ஆ.பெ.விஸ்வநாதம், கேம்பியன் ஆகிய மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

துறையூர் வட்டாரத்தில் துறையூர், கண்ணனூர், காளிப்பட்டி, கரட்டாம்பட்டி, உப்பிலியபுரம், கோவிந்தபுரம், பச்சபெருமாள்பட்டி, வைரிசெட்டிப்பாளையம், கோட்டப்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த 37 தேர்வு மையங்களில் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இந்த மையங்களில் 9,668 பேர் தேர்வு எழுதினர்.

துறையூர் தாசில்தார் சந்திரகுமார் மேற்பார்வையில் துணை தாசில்தார்கள் மோகன், செல்வி, ஆனந்த், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், பாலசுந்தரம், சரவணகுமார் ஆகியோர் தலைமையில் 6 குழுவினர் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டன. மேலும் பறக்கும் படையை சேர்ந்த வேளாண்மை உதவி இயக்குனர் சந்தானகிருஷ்ணன், டாஸ்மாக் திருச்சி மாவட்ட மேலாளர் செல்வம் ஆகியோர் அடங்கிய குழுவினரும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்தனர். தேர்வு மையங்களில் வினாத்தாள், விடைத்தாள் ஆகியவற்றில் ஏதேனும் குறைகள் தேர்வர்களுக்கு உள்ளதா என்பது குறித்து அறிந்து, அவற்றை சரி செய்ய தேர்வாணைய உதவி பிரிவு அலுவலர் இசக்கிமுத்துவும் தேர்வு நடைபெறும் இடங்களுக்கு சென்று வந்தார்.

மேலும் செய்திகள்