கோத்தகிரி அருகே தங்க நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறி மோசடி, வடமாநில வாலிபர் கைது

கோத்தகிரி அருகே தங்க நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறி மோசடி செய்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-11 22:30 GMT
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பங்கலோரை கிராமத்தை சேர்ந்த சுரேஷ். அவருடைய மனைவி சாந்தி (வயது 36). இவர் நேற்று முன்தினம் தனியாக வீட்டில் இருந்தபோது வடமாநில வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலீஷ் போட்டு கொடுப்பதாக சாந்தியிடம் கூறி உள்ளனர்.

இதையடுத்து சாந்தி அவர்களிடம் தான் அணிந்து இருந்த வெள்ளி மெட்டியை கழட்டி கொடுத்தார். முதலில் இதை பாலீஷ் போட்டு தாருங்கள் நன்றாக இருந்தால் தங்க நகையை பாலீஷ் போட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். மெட்டியை வாங்கி கொண்ட அந்த இளைஞர்கள் தாங்கள் வைத்து இருந்த ஒரு சிறிய பாட்டிலில் மெட்டியை போட்டு எடுத்தனர். பாட்டிலில் இருந்த திரவத்தில் போட்டு எடுத்ததும் மெட்டி பளபளப்பாக மாறி இருந்தது.

இதை பார்த்த சாந்தி உடனே தான் அணிந்து இருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை கழட்டி அந்த இளைஞர்களிடம் கொடுத்தார். அவர்கள் தங்க சங்கிலியை பாட்டிலில் இருந்த திரவத்தில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்தனர். அப்போது தங்க சங்கிலி அறுந்து துண்டு துண்டாக இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

அதற்குள் ஒரு வாலிபர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் துண்டான தங்க நகையை சாந்தியிடம் கொடுத்து நகை கடையில் சரி செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அதற்கு ரூ.300 வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி தப்பி ஓட முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பொதுமக்கள் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில், தங்க நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது பீகார் மாநிலம் மட்டியாரி கிராமத்தை சேர்ந்த சாம்லால் ஷா (29) என்பது தெரியவந்தது. அவர் பல இடங்களில் தங்க நகைகளை பாலீஷ் செய்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

சாம்லால்ஷாவிடம் 3 கிராம் தங்க நகை மட்டுமே இருந்தது. அதை போலீசார் மீட்டனர். இது குறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி சாம்லால் ஷாவை கைது செய்தார். தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறும்போது, வடமாநிலத்தை சேர்ந்தவர் வியாபாரிகள் போல் கிராமங்களுக்கு சென்று நோட்டமிட்டு தனியாக பெண்கள் உள்ள வீடுகளையும், பூட்டிய வீடுகளையும் தெரிந்து கொள்கிறார்கள். பின்னர் இதுபோன்ற மோசடி மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுடன் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் கிராம பகுதிகளில் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்