பட்டதாரி பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கிராம நிர்வாக அதிகாரி கைது

மீன்சுருட்டி அருகே பட்டதாரி பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-11 23:00 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள முத்துசேர்வாமடம் பெரிய தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகள் புஷ்பா (வயது 30). திருமணமாகாதவர். முதுநிலை பட்டதாரி. இந்நிலையில் வீட்டில் இருந்த புஷ்பாவை திடீரென கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி காணாமல் போய்விட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், புஷ்பா இளையபெருமாள் நல்லூர் கிராமத்தில் உள்ள முந்திரி தோட்டத்தில் உள்ள முந்திரி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மீன்சுருட்டியை அடுத்துள்ள குண்டவெளி காலனி தெருவை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி செல்வராசு (33) தான் புஷ்பாவின் இறப்புக்கு காரணம் என புஷ்பாவின் உறவினர்கள், செல்வராசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் செல்வராசு மீது பட்டதாரி பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். மேலும் கிராம நிர்வாக அதிகாரி செல்வராசுவை கைது செய்ய வலியுறுத்தி புஷ்பாவின் உறவினர்கள் மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் செல்வராசு சென்னை திருவள்ளூர் மாவட்டம் தேரடி பஸ் நிலையத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை அங்கு சென்று 5 மாதாமாக தலைமறைவாக இருந்த செல்வராசுவை கைது செய்தனர். பின்னர் அவரை மீன்சுருட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செல்வராசுவை ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்