புதிதாக கட்டப்பட்டு காட்சி பொருளாக காணப்படும் கழிவறைகள்

மீனம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு பயன்படாமல் காட்சி பொருளாக உள்ள 10 கழிவறைகள் எப்போது திறக்கப்படும்? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2018-02-11 22:30 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பரங்கிமலை-பல்லாவரம் கண்டோண்மெண்ட் போர்டு பகுதிக்கு உட்பட்ட மீனம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே குளத்துமேடு கருமாரி அம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த பகுதி ராணுவத்துக்கு சொந்தமானது. இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 300-க்கும் அதிகமானவர்கள் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.

ராணுவத்திற்கு சொந்தமான பகுதி என்பதால் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யமுடியாமல் கண்டோண்மெண்ட் போர்டு நிர்வாகம் தவித்து வந்தது. இங்கு வசிப்பவர்கள் ரெயில்வே தண்டவாளங்களையும், மறைவான முட்செடிகள் கொண்ட பகுதிகளையும் தான் கழிவறையாக பயன்படுத்தி வந்தனர்.

ரெயில்வே தண்டவாள பகுதிகளை கழிவறையாக பயன்படுத்த செல்லும்போது சிலர் அடிபட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், நீண்ட காலமாக கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பரங்கிமலை-பல்லாவரம் கண்டோண்மெண்ட் போர்டு நிர்வாகம் பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் குளத்துமேடு பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கழிப்பிட வசதி செய்து தர முடிவு செய்யப்பட்டது. இதற்கு ராணுவ அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.12 லட்சம் செலவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என 10 கழிவறைகள் கட்டப்பட்டன. இந்த கழிவறைகளுக்கு தண்ணீர் வசதி செய்து தர அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்து கண்டோண்மெண்ட் நிர்வாகத்தினர் பணிகளை தொடங்கினார்கள். ஆனால் அதற்கு ராணுவ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் புதிதாக கட்டப்பட்ட கழிவறைகள் கடந்த 3 மாதங்களாக மூடிக்கிடப்பதோடு காட்சி பொருளாக மட்டுமே காணப்படுகிறது. 30 ஆண்டுகளாக கழிப்பிட வசதியின்றி தவித்த மக்கள் தற்போது கழிவறைகள் கட்டப்பட்டும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.

ராணுவ அமைச்சகத்தில் உரிய அனுமதி பெற்று தண்ணீர் வசதி செய்து கொள்ள வேண்டும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்து விட்டதாகவும், இதற்கான அனுமதி பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் தண்ணீர் வசதி செய்து தரப்படும் என கண்டோண்மெண்ட் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கழிவறைகள் தண்ணீர் வசதி பெற்று எப்போது திறக்கப்படும்? என்பதை பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர். எல்லாவற்றுக்கும் தீர்வு அதிகாரிகள் கையில்தான் உள்ளது.''

மேலும் செய்திகள்