ஐம்பது வயதைக் கடந்த ஆனந்தம்

காலம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவிகளாக இருந்தவர்கள் இன்று முதியோர்களாகி, பாட்டிகள் என்ற அந்தஸ்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

Update: 2018-02-11 07:26 GMT
காலம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவிகளாக இருந்தவர்கள் இன்று முதியோர்களாகி, பாட்டிகள் என்ற அந்தஸ்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி தற்போது 65 வயதை தொட்டுவிட்ட மாணவிகள் சிலர், அன்று தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியைகளை நினைத்துப்பார்த்தார்கள். ‘தங்களிடம் பெரும் தாக்கத்தையும், பசுமையான நினைவுகளையும் விட்டுச் சென்ற அவர்கள் இப்போது 80 வயதை கடந்திருப்பார்கள். அன்றைய மாணவிகளெல்லாம் சேர்ந்து, தங்கள் ஆசிரியைகளை தேடிப்பிடித்து சந்தித்து கவுரவித்து, ஆசிரியர் - மாணவிகள் உறவுகள் பற்றி கலந்துரையாடினால் எப்படி இருக்கும்?’ என்று யோசித்து செயலில் இறங்கினார்கள். அந்த தேடுதல் அவர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தையும், ஆனந்தத்தையும் கொடுத்திருக்கிறது.

அவர்கள் விருதுநகர் சத்திரிய மகளிர் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்படிப்பை முடித்தவர்கள். படிப்பு முடிந்ததும், பிரிந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருசிலர் படிப்பை தொடராமல் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறார்கள். பெரும்பாலானோர் தொடர்ந்து படித்து பள்ளி ஆசிரியைகள், பேராசிரியைகள், பள்ளி முதல்வர்கள், நிர்வாகிகள், அரசு அதிகாரிகளாக பிரகாசித்திருக்கிறார்கள். சிலர் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் வசித்திருக்கிறார்கள். அவர்களில் பல மாணவிகள் ஒருங்கிணைந்து சந்தித்து மகிழ்ந்து, தங்கள் ஆசிரியைகளையும் கவுரவித்திருக்கிறார்கள். விருதுநகரில் இந்த நெகிழ்ச்சி சந்திப்பு நடந்தேறி இருக்கிறது. அழைப்பிதழ் அச்சிட்டும், மலரும் நினைவுகளை புரட்டிப்பார்க்கும் வகையில் படங்கள், சுவாரசியமான நிகழ்வுகளை குறிப்பிட்டும் விழா மலர் வெளியிட்டும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர், முனைவர் ஜான்சி தாம்சன். 65 வயதாகும் இவர் சென்னை பரங்கிமலையில் வசித்து வருகிறார். மாணவியாக, ஆசிரியையாக, பள்ளி நிர்வாகியாக தொடர்ந்து கல்வி பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். பழைய மாணவிகள்-ஆசிரியைகள் சந்திப்பு பற்றியும், இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள்-மாணவர் களுக்கு இடையேயான உறவு நிலை குறித்தும் மனம் திறந்து பேசுகிறார்.

‘‘எனது பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத். எனது தந்தை சுந்தரம் மனுவேல் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அவருக்கு அடிக்கடி பணி இடமாறுதல் ஏற்பட்டதால் விருதுநகரில் ஆசிரியையாக பணிபுரிந்த என் சித்தியின் பராமரிப்பில் விடுதியில் தங்கி படித்தேன். நான் 6-ம் வகுப்பு படித்தபோது சில பள்ளிகளில் புதிதாக ஆங்கில வழிக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அதில் எங்கள் பள்ளியும் ஒன்று. நாங்கள் 33 பேர் ஆங்கில படிப்பில் சேர்ந்தோம். சிலர் ஓரிரு நாட்களிலேயே தமிழ் வழி கல்விக்கு திரும்பிவிட்டார்கள்.

எங்களுக்கும் ஆங்கிலம் படிப்பது ஆரம்பத்தில் கடினமாகவே இருந்தது. ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். தமிழில் பேசக்கூடாது, அப்போதுதான் ஆங்கிலத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்றார்கள். வகுப்பின் முதல் நாளில் தலைமை ஆசிரியை ஏ.பி.ஜெயலட்சுமி எங்களுக்கு பாடம் எடுக்கும் ஒவ்வொரு ஆசிரியையையும் ஆங்கிலத்தில் பேசி அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த ஆசிரியரின் பெயரும், அவர் எடுக்கப்போடும் பாடமும் மட்டும்தான் எங்களுக்கு புரிந்தது. அவர் ஒவ்வொரு ஆசிரியையையும் அறிமுகப்படுத்தியபோது நாங்கள் கரவொலி எழுப்பினோம். அது இன்றும் பசுமையான நினைவுகளாக இருக்கிறது. அதுபோல் ஏராளமான சம்பவங்கள் எங்கள் பள்ளி வாழ்க்கையில் நடந்தது. அதை எல்லாம் இப்போது அனைவரும் நினைவுகூறி மகிழ்ந்தோம்.

நாங்கள் படிக்கும்போதெல்லாம் எதையும் மனப்பாடம் செய்ததில்லை. ஆசிரியை சொல்வதை கூர்ந்து கவனிப்போம். எங்களுடைய முகத்தை பார்த்தே எங்களுடைய சந்தேகத்தை ஆசிரியை யூகித்துவிட்டு கற்றுக்கொடுப்பார். ஆங்கில இலக்கணத்தை நன்றாக சொல்லிக்கொடுத்தார்கள். நாங்களும் ஆர்வமாக கற்றோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்கும்போது நாங்கள் கற்றுவைத்திருக்கும் ஆங்கில இலக்கணம் அழித்து போய்க்கொண்டிருக்கிறதோ? என்ற கவலை ஏற்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள் ஆங்கில இலக்கணத்தையும் மனப்பாடமாகவே படிக்கிறார்கள். பாடம் நடத்தும்போது ஆசிரியர்கள் விளக்கி கூறினாலும் கவனத்தில் கொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள். பரீட்சைக்கு படிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அசட்டையாக இருந்துவிட்டு பிறகு மனப்பாடம் செய்கிறார்கள்’’ என்றார்.

மாணவர்களை கண்டிக்கும் விஷயத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறை தலைகீழாக மாறிவிட்டது என்பது ஜான்சி தாம்சனின் ஆதங்கமாக இருக்கிறது.

‘‘நாங்கள் படித்த காலத்தில் சரியாக படிக்கவில்லை என்றால் ஆசிரியர்கள் கண்டிப்பார்கள். சில சமயங்களில் தண்டனை கடுமையாகவும் இருக்கும். ஆசிரியர்களிடம் அடிவாங்கி எங்கள் கைகள் வீங்கியிருக்கிறது. ஆனால் ஒருபோதும் வீட்டில் சொல்ல மாட்டோம். சாப்பிடும்போது கைகள் நடுங்க ஆரம்பித்துவிடும். பெற்றோர்கள் பார்த்தால், ‘எதுக்கு அடி வாங்கினாய். நீ ஒழுங்காக படித்திருக்க மாட்டாய். இன்னும் அடி வாங்கினால்தான் நீ திருந்துவாய்’ என்பார்கள்.

மதிப்பெண் குறைவாக எடுத்தால் என் தந்தை, ‘நீ படித்தது போதும். ஆஸ்டலை காலி செய்து விட்டு வீட்டுக்கு வா’ என்பார். நான் ஆசிரியர்களிடம் சென்று ‘நான் இனி நன்றாக படிப்பேன். என்னை வீட்டுக்கு அனுப்பிவிடா தீர்கள்’ என்று மன்றாடுவேன். அன்றைய காலகட்ட பெற்றோர், ஆசிரியர்கள் அடித்தால் ஏன் அடித்தீர்கள் என்று கேட்கமாட்டார்கள். ஒழுங்காக படிக்காவிட்டால் தோலை உறித்துவிடுங்கள் என்பார்கள். ஆனால் இன்றைய கால பெற்றோர் பிள்ளைகளுக்கு பயப்படுகிறார்கள். அவர்களை கண்டித்தால் வீட்டை விட்டு ஓடி விடுவார்களோ? வேறு ஏதாவது விபரீத முடிவுகளை எடுத்துவிடுவார்களோ? என்று பதறுகிறார்கள்.

சில பெற்றோர், ‘என் பிள்ளை எதிர்த்து பேசுகிறான். திருப்பி அடிக்க வருகிறான். எங்களை மதிப்பதில்லை. ஏதாவது செய்து அவனை திருத்துங்கள்’ என்கிறார்கள். ஆனால் இன்று ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டும், வாய் பூட்டப்பட்டும் இருக்கிறது. அன்றைய ஆசிரியர்கள்- மாணவர்கள் உறவு உணர்வுப்பூர்வமானதாக இருந்தது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை முழுமையாக நம்பி ஆசிரியர்கள் கையில் ஒப்படைத்தார்கள். அவர்களை கண்டித்தாலும், தண்டித்தாலும் தலையிடமாட்டார்கள். மாணவர்களும் ஆசிரியர்களின் அன்பையும், கண்டிப்பையும் ஒரே மாதிரியாகவே எடுத்துக்கொண்டார்கள்.

இன்றோ மென்மையாக கண்டிக்க நினைக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் மனம் நோகச்செய்யும் நிகழ்வுகள்தான் நடக்கின்றன. கெட்ட பழக்கங்களுக்கும், போதை பழக்கவழக்கங்களுக்கும் அடிமையாகிறார்கள். அதனை ஆசிரியர்கள், பெற்றோர் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அவர்களாலும் பிள்ளைகளை மாற்றமுடிவதில்லை. தாம் கண்டித்து ஏதாவது விபரீதமுடிவை எடுத்துவிடுவார்களோ? என்று பயப்படுகிறார்கள்” என்று ஒரு கல்வியாளராக வேதனைப்படுகிறார்.

ஜான்சி தாம்சனும், உடன் படித்தவர்களும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தொடர்பில் இணைந்திருக்கிறார்கள். செல்போனும், சமூகவலைத்தளங்களும் இவர்களின் இணைப்பை எளிமைப்படுத்தியிருக்கிறது. அனைவரையும் தொடர்பு கொண்டு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தபோது ஒரே மாதிரியான புடவை உடுத்துவதற்கும் தீர்மானித் திருக்கிறார்கள். அதற்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் வசித்தவர் களுக்கு புடவைகளை அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

‘‘நான் 10 வருடங்களாகத்தான் என்னுடன் படித்தவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். அன்றைய காலகட்டத்தில் கடிதத்தொடர்புதான் பிரதானமாக இருந்தது. இன்று சமூகவலைத்தளங்கள் அனைவரையும் ஒரே குழுவாக இணைய வைத்துவிட்டது. அதனால் எங்கள் சந்திப்பும் எளிமையாக அமைந்தது. விருதுநகரில் படித்து அங்கேயே குடும்பத்துடன் செட்டிலானவர்கள், அங்கு வசிக்கும் ஆசிரியைகளை நேரில் சென்று அழைத்துவந்தார்கள். 3 பேர் கனடா, கலிபோர்னியா, ஜெர்மனி ஆகிய இடங்களிலிருந்து விழாவில் பங்கேற்பதற்காக வந்தார்கள். எங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியைகளில் 3 பேர் எழுந்து நடமாட முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களை வீட்டுக்கே சென்று சந்தித்து பேசினோம். அவர்கள் ஆனந்தம் கொண்டார்கள்.

எங்களுடன் படித்தவர்களில் 22 பேர்தான் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதினோம். அனைவரும் 400 மதிப்பெண்கள் வாங்கினோம். எனினும் நிறைய பேர் குடும்பத்தின் நிர்பந்தம் காரணமாக படிப்பை தொடராமல் திருமணம் செய்துவிட்டார்கள். தாங்கள் படிக்கமுடியாத படிப்புகளை தங்கள் பேரன், பேத்திகளை படிக்கவைத்து அழகுபார்க்கிறார்கள். எங்களைவிட அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதை பார்க்கும்போது மனநிறைவாக இருக்கிறது.

50 ஆண்டுக்கு பிறகு சந்தித்தபோதும் யாருடைய முகமும் எங்களுக்கு மறக்கவில்லை. அனைவரும் கட்டிப்பிடித்து நலம் விசாரித்துக்கொண்டோம். உணர்ச்சிப்பூர்வமான தருணமாக அது அமைந்தது. எங்கள் சந்திப்பு பழைய மாணவிகளின் கலந்துரையாடல் என்பதை கடந்து கூட்டு குடும்ப வாழ்வியல் முறையை நினைவு படுத்துவதாக அமைந்துவிட்டது. நாங்களே வயதானவர்கள். எங்களை காட்டிலும் ஆசிரியைகள் மூத்த குடிமக்கள். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து கவுரவித்தபோது அகமகிழ்ந்து போனார்கள்.

எங்கள் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியை கவுரவப்படுத்தி நாங்கள் மகிழ்ந்தோம். ‘நீங்கள் பள்ளிக்கூடத்தையும், ஆசிரியைகளையும் மறக்காமல் நினைவில் வைத்து சிறப்பித்துவிட்டீர்கள். என்னிடம் படித்தவர்கள் நிறையபேர் சந்தித்து பேசி இருக்கிறார்கள். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் சந்திப்பார்கள் என்று நான் நினைத்துக்கூடபார்க்கவில்லை. இப்படியொரு நிகழ்வு நடந்திருப்பது வாழ்வில் மறக்கமுடியாதது’ என்று தலைமை ஆசிரியை மனம் நெகிழ்ந்து போனார். எங்களுக்கும் மனநிறைவாக இருக்கிறது’’ என்கிறார், முனைவர் ஜான்சி தாம்சன்.

ஆசிரியர்- மாணவர் உறவு மேம்பட இந்த அனுபவங்கள் அனைவருக்கும் தேவைதான்!

மேலும் செய்திகள்