அழகான அங்கன்வாடி

அங்கன்வாடி மையத்தை தத்தெடுத்து தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்பு வசதிகளுடன் மிளிர வைத்திருக்கிறார், கரீமா சிங்! ஐ.ஏ.எஸ்.;

Update: 2018-02-11 06:36 GMT
ங்கன்வாடி மையத்தை தத்தெடுத்து தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்பு வசதிகளுடன் மிளிர வைத்திருக்கிறார், கரீமா சிங்! ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தனது சொந்த பணத்தை செலவு செய்து அங்கன்வாடி மையத்தை மழலைகள் விரும்பும் வகுப்பறையாக அழகுபடுத்தி இருக்கிறார். அங்கு சிறுவர், சிறுமியரை கவரும் வகையில் பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், கார்ட்டூன்கள், பல வண்ணங்களை கொண்ட நாற்காலிகள், மேஜைகள் இடம்பிடித்துள்ளன. சுவர் முழுவதும் எழுத்தாகவும், உருவமாகவும் படிப்பு சார்ந்த தகவல்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

தொடக்க கல்வி பயில்வதற்கு முன்னோட்டமாக 5 வயது வரையுள்ள குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வகையில் ஏராளமான தகவல்கள் அந்த மையத்தில் இடம்பிடித்திருக்கின்றன. இந்த அங்கன்வாடி மையம் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபக் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. அந்த மாவட்டத்தின் சமூக நலத்துறை அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் கரீமா சிங் கல்விக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு அங்கமாக முறையான பராமரிப்பு இன்றி கிடக்கும் அங்கன்வாடி மையங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக் கிறார்.

‘‘இந்த அங்கன்வாடி மையம் மோசமான நிலையில் இருந்தது. குழந்தைகளை கவரும் இடமாக இருந்தால்தான் அவர்கள் ஆர்வமாக வருவார்கள். அதனால் அதனை அழகுபடுத்த முடிவு செய்தேன். இப்போது இந்த மையம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதிகாரிகள், பொதுமக்கள், வணிகர்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மற்ற அங்கன்வாடி மையங்களை தத்தெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். மாவட்ட நிர்வாகம் சார்பிலும் 50-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மறுசீரமைப்பு செய்ய இருக்கிறோம்’’ என்றார்.

கரீமா சிங்கின் நடவடிக்கைக்கு கிராம மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மேலும் செய்திகள்