‘அப்பாவும்... இந்தியாவும்...’ நினைவுகளில் மூழ்கும் நேதாஜி மகள்

‘‘நேதாஜி மாதிரியான ஒரு மாமனிதரை அப்பாவாகப் பெற்றிருப்பதே அரிதான விஷயம்தான்’’ என்கிறார், அனிதா போஸ். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் ஒரே புதல்வி.

Update: 2018-02-11 06:31 GMT
‘‘நேதாஜி மாதிரியான ஒரு மாமனிதரை அப்பாவாகப் பெற்றிருப்பதே அரிதான விஷயம்தான்’’ என்கிறார், அனிதா போஸ். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் ஒரே புதல்வி. ஜெர்மனி பிரஜை. 74 வயதாகும் இவர் பொருளாதார நிபுணர்.

அனிதாவை நேதாஜி கடைசியாகப் பார்த்தபோது இவர் வெறும் ஒரு மாத குழந்தை. எனவே, அனிதாவுக்கு அப்பாவைப் பற்றிய நினைவு ஏதும் இல்லை. அதனாலேயே அனிதா தனது முழு வாழ்க்கையையும் தன்னுடைய அப்பாவைப் பற்றி அறிவதற்கும், அவரது மரணப் புதிரை அவிழ்ப்பதற்குமே அர்ப்பணித்திருக்கிறார். ஒரு வரலாற்று நாயகரின் மனைவி என்ற பெரும் பொறுப்பை தனது அம்மா எமிலி ஷெங்கெல் சிறப்பாகக் கையாண்டதாக அனிதா கூறுகிறார்.

ஜெர்மனியில் நேதாஜியின் செயலாளராக இருந்த எமிலியும் நேதாஜியும் 1937-ம் ஆண்டு ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர். இந்து சம்பிரதாயங்களின்படி அத்திருமணம் நடைபெற்றது.

‘‘எனது தாயார் எப்போதும் என்னிடம் சொல்வது, ‘உனது தந்தை ஒரு மகத்தான மனிதராக இருக்கலாம். ஆனால் அதனாலேயே நீ பிரபலமாகிவிடமுடியாது. சொல்லப்போனால், அது உனக்கு பொறுப்பைத்தான் கூட்டும்’ என்பார். அது உண்மைதான்..’’ என்று பழைய நினைவுகளில் மூழ்கிச் சொல்கிறார், அனிதா.

ஜெர்மனி ஆக்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணிபுரிந்த அனிதா, அந்நாட்டின் சோசியல் டெமாக்ரட்டிக் கட்சி சார்ந்த அரசியல்வாதியும்கூட.

நேதாஜியின் மரணம் குறித்த தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை என்பதில், கோடிக்கணக்கான இந்தியர்களைப் போல அவரது மகளுக்கும் வருத்தம் இருக்கிறது.

விமான விபத்தைச் சந்தித்த நேதாஜியின் மிச்சங்கள் என்று கருதப்படுபவை, ஜப்பான் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோவிலில் உள்ளன. அதைப் பெற்று டி.என்.ஏ. பரிசோதனை நடத்த இந்திய அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என்பது அனிதாவின் மனக்குறை.

‘‘இந்த விஷயத்தில் குறிப்பிடும்படியாக எதுவும் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ரெங்கோஜி கோவிலில் உள்ளவை அப்பாவின் மிச்சங்கள்தானா என்ற கேள்விக்கு டி.என்.ஏ. பரிசோதனைதான் விடை கொடுக்கும். அவை அப்பாவினுடையது இல்லை என்றாலும் மக்களின் எதிர்பார்ப்பு ஒரு முடிவுக்கு வந்து விடும்’’ என்கிறார் அனிதா.

நேதாஜியின் கோப்புகளை தற்போதைய அரசு வெளியிட்டபோதும், ஜப்பானில் உள்ள மிச்சங்களை இந்தியாவுக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இல்லாததால், அதுபற்றி இந்திய அரசுக்கு தான் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை என்று அனிதா சொல்கிறார்.

‘‘ரெங்கோஜி கோவிலில் உள்ள மிச்சங்களை இந்தியாவை எடுத்துக்கொள்ளும்படி நீண்டகாலமாகவே ஜப்பான் கேட்டுவருகிறது. ஆனால் அதனால் ஏதும் பிரயோஜனமில்லை என்று கருதுவதாலோ என்னவோ, இந்தியா அதைத் தவிர்த்து வருகிறது. அந்த மிச்சங்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதை கடுமையாக எதிர்ப்பவர்களும் உண்டு. ஏன், எங்கள் குடும்பத்தினருக்கும்கூட இதில் இரு வேறு கருத்து இருக்கிறது’’ என்கிறார் அனிதா நிதானமான குரலில்.

நேதாஜியின் மரணத்துக்கு, ஏற்கக்கூடிய ஒரே காரணம், 1945-ல் தைவானில் நடந்த விமான விபத்து என்பது அனிதாவின் கருத்து.

‘‘இதற்கு முன்பு அமைக்கப்பட்ட இரு ஆணையங்களும், அப்பா விமான விபத்தில்தான் இறந்தார் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றன. ஆவணங்கள் சிலவும் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.’’ என்கிறார்.

ஆனால் நேதாஜி இறக்கவில்லை என்ற கதைகள் இன்றும் உலவிக் கொண்டிருக்கின்றன. தானும் அதுபோன்ற கதைகளைக் கேட்டிருப்பதாகக் கூறுகிறார் அனிதா.

‘‘சிலநேரங்களில், அம்மாதிரியான கிறுக்குத்தனமாக கதைகள் கிளம்பி அடங்கும். ஒருமுறை, எனது தந்தை என்று தவறாகக் கருதப்பட்ட ஒரு நபருடன் நான் பேசினேன். அவர் ஆஸ்திரிய நாட்டுக்காரர் என்றபோதும், இந்துத் துறவி. அவரை மக்கள் சிலர், ‘நீங்கள்தான் நேதாஜி’ என்றபோது, அவர் சிரித்துவிட்டு ‘நான் நேதாஜியை விட 8 அங்குலங்கள் உயரமானவன்’ என்றாராம். ஆனாலும், நேதாஜியால் 8 அங்குலங்கள் உயரமாக வளர்ந்திருக்க முடியும் என்றும் மக்கள் நம்புகிறார்கள்!’’ என்று கூறுகிறார்.

நேதாஜியைப் பற்றி இப்படி பரப்பப்படும் கதைகள் அபத்தமானவையாக இருக்கின்றன என்று அனிதா சொல்கிறார்.

‘‘உத்தரப்பிரதேசத்தில், ஒரு கேள்விக்குரிய சூழலில் அவர் வாழ்வதாகவும் ஒரு கதை உலவுகிறது. நாட்டுக்காக மாபெரும் தியாகங்கள் செய்த ஒரு மனிதர், அப்படி சத்தமில்லாமல் வாழ்வாரா? அவர் தனது குடும்பத்தினர், நண்பர் களைக்கூட தொடர்புகொள்ளாமல் வாழ்கிறார் என்பது அர்த்தமில்லாமல் இருக்கிறது. அப்பாவின் விஷயத்தில் ஓரளவு உறுதியாகத் தெரிவது, அந்த விமான விபத்துதான்’’ என்கிறார் அனிதா.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் நேதாஜியின் பங்களிப்புக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்ற மனக்குறையும் அனிதாவுக்கு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்றதுக்கு, அகிம்சைவழிப் போராட்டத்துடன், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவமும் காரணம் என்று அவர் அழுத்தமாகக் கூறுகிறார்.

1945-ல் சிறைபிடிக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களை ஆங்கில அரசு விசாரிக்க முயன்றபோது, இந்திய மக்கள் மத்தியில் அந்த வீரர்களுக்கு மாபெரும் ஆதரவு அலை எழுந்தது. குறிப்பாக, ஐ.என்.ஏ.வின் ஷாநவாஸ் கான், பிரேம் சாகல், குர்பக்ஷ் சிங் ஆகியோரை டெல்லி செங்கோட்டையில் விசாரிக்க முயன்றது, ஆங்கிலப் படையில் இருந்த இந்திய வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளையும் வீரர்களையும் மக்கள் ஹீரோக்களாக போற்றியதைப் பார்த்த வெள்ளையர்கள், இனியும் இந்தியாவை தங்கள் பிடியில் வைத்திருக்க முடியாது என்பதை உணர்ந்தனர்’’ என்று விலாவரியாக விவரிக்கிறார், அனிதா.

‘‘நான் எந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும் குறைத்துமதிப்பிடவில்லை. ஆனால் தேச விடுதலைக்காக தம் உயிரையும் தர முன்வந்த வீரர், வீராங்கனைகளை நாம் மதிக்க வேண்டும்!’’ என்று அழுத்தமாக சொல்கிறார்.

இன்றைய இந்தியா, பொருளாதார வளர்ச்சியையும், சுற்றுச்சூழலையும் சமநிலையில் வைத்துப் பராமரிக்க வேண்டும், பொது சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது அனிதாவின் ஆலோசனை.

மேலும் செய்திகள்