ஓட்டேரியில் 12-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மேஸ்திரி பலி

ஓட்டேரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக 2 என்ஜினீயர்கள் மற்றும் கட்டிட மேற்பார்வையாளர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-02-11 00:00 GMT
பெரம்பூர்,

சென்னை பெரம்பூர் ஸ்டீபன்சன் சாலையில் தனியாருக்கு சொந்தமான 14 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கடந்த 3 ஆண்டுகளாக அங்கேயே தங்கி கட்டிடவேலை செய்து வருகின்றனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஸ்தாபில் (வயது 35) என்பவரும், தனது 2 மனைவிகளான காத்தூன், சேசாதி மற்றும் 6 பிள்ளைகளுடன் அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார்.

நேற்று காலை தொழிலாளர்கள் அனைவரும் 12-வது மாடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதற்கு தேவையான சிமெண்டு, ஜல்லி, மணல் ஆகியவற்றை தற்காலிக ‘லிப்ட்’ மூலம் தரையில் இருந்து 12-வது மாடிக்கு ஏற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த கட்டிட மேஸ்திரி ஸ்தாபில், திடீரென 12-வது மாடியில் இருந்து தவறி தலைகுப்புற கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமதுநாசர், சப்-இன்ஸ்பெக்டர் காதர்மீரா மற்றும் போலீசார் பலியான ஸ்தாபில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி விசாரணை நடத்தியதில், அங்கு கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமலும், தற்காப்பு உபகரணங்கள் வழங்காமலும் கொத்தடிமைகள் போல் வேலை வாங்கி வந்தது தெரிந்தது.

இதையடுத்து புளியந்தோப்பு துணை கமிஷனர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் போலீசார், போதிய பாதுகாப்பு வசதியின்றி வேலை செய்து வந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்து கட்டிட என்ஜினீயர்களான சுரேஷ் (40), ராஜேந்திரன் (35) மற்றும் மேற்பார்வையாளர் முகேஷ் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்