பிரதமர் மோடி 19–ந் தேதி மைசூரு வருகை
மைசூரு–பெங்களூரு இடையே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள இரட்டை ரெயில் பாதையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிற 19–ந் தேதி மைசூருவுக்கு வருகை தருகிறார் என்று பிரதாப் சிம்ஹா எம்.பி. கூறினார்.
மைசூரு,
மைசூருவில் நேற்று பிரதாப் சிம்ஹா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பிரதமர் மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருகிற 19–ந் தேதி மைசூருவுக்கு வருகை தருகிறார். அன்றைய தினம் மைசூரு–பெங்களூரு இடையே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள இரட்டை ரெயில் பாதையை தொடங்கி வைக்கிறார். பின்னர் மைசூரு– ராஜஸ்தான் இடையே இயங்க உள்ள புதிய ரெயிலை அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.இதனை தொடர்ந்து கே.ஆர்.எஸ். அணைக்கு செல்லும் சாலையில் பிருந்தாவன் ஏரியா என்ற பகுதியில் கட்டப்பட்டு உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பின்னர் மைசூரு அருகே நாகனஹள்ளி பகுதியில் புதிய சேட்டிலைட் ரெயில் நிலையத்தை அவர் தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர் மைசூரு–பெங்களூரு இடையே அமைய உள்ள 8 வழி சாலைகளுக்கான பணிகளை அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து மைசூருவில் நடக்கும் பா.ஜனதா தொண்டர்களின் மாநாட்டிலும் பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் வருகைக்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.