ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

திருவாரூர் அருகே கடம்பங்குடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் உள்பட 170 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் பங்கேற்க வந்த பேராசிரியர் ஜெயராமனையும் கைது செய்தனர்

Update: 2018-02-10 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள கடம்பங்குடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதனால் நிலத்தடி நீர், விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியினை தொடங்கியது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு பணிகளை தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதனையடுத்து கொரடாச்சேரி போலீசார், ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து சிவக்குமார், சுந்தரபாண்டியன், சண்முகசுந்தரம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காக எந்திரங்கள், தளவாட பொருட்களை லாரிகள் மூலம் கச்சா எண்ணெய் எடுக்கும் இடத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என கூறி திருவாரூர் கோர்ட்டு விடுதலை செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று கடம்பங்குடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று 2-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட பொதுமக்கள் சென்ற போது அவர்களை போலீசார் தடுத்ததால் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயத்தையும், குடிநீரையும் பாதிக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்தும், கடம்பங்குடியை விட்டு வெளியேற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் உள்பட 170 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக போராட்டத்தில் பங்கேற்க வந்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கிராமத்திற்குள் வந்தார். அவரை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்