கியாஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு

வாடகை டெண்டரில் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

Update: 2018-02-10 23:00 GMT
நாமக்கல்,

தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது.

இவை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு (பாட்டிலிங் பிளாண்டு) கொண்டு சேர்க்கின்றன.

ஆயில் நிறுவனங்கள் ஒவ்வொரு 3 ஆண்டுக்கும் மண்டல வாரியான டெண்டர் மூலம் வாடகைக்கான விலைப்புள்ளியை நிர்ணயம் செய்து வந்தது. இதற்கிடையே பிரதமரின் அனைவருக்கும் சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், அதிக அளவில் கியாஸ் டேங்கர் லாரிகள் இயங்க வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பில் நாமக்கல் பகுதியில் தற்போது புதிதாக கடந்த ஆண்டு சுமார் 3 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகள் வாங்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. இதனால் நாமக்கல் பகுதியில் மொத்தம் 7,500 கியாஸ் டேங்கர் லாரிகள் உள்ளன.

ஏற்கனவே இருந்த டெண்டர் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்த காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து வருகிற ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை இயக்க டேங்கர் லாரி உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்தது. அதன்படி தற்போது லாரிகள் இயங்கி வருகின்றன.

இந்தநிலையில் மேற்கு, கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய மண்டலம் வாரியாக அறிவிக்கப்பட்ட வாடகை டெண்டர் முறை ரத்து செய்யப்பட்டு இனி ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியே டெண்டர் அறிவிக்கப்படும். மேலும் வாடகை டெண்டரில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது.

மாநில அளவில் டெண்டர் நடைபெற்றால் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில பதிவெண் உள்ள 4,500 லாரிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும். மற்ற கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியை நேரில் சந்தித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த மாதம் முறையிட்டனர்.

இதன்பிறகும் டெண்டர் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் புதிய வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அறிவித்தன. இந்த டெண்டர் காலம் 2018-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதில் இதுவரை மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த டெண்டர் நடைமுறை மாறி, தற்போது ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் என்ற புதிய முறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இந்த டெண்டர் மார்ச் மாதம் 12-ந் தேதி நடைபெறும் எனவும், ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய டெண்டர் நடைமுறை மூலம் ஒரு வாகனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதோ, அந்த மாநிலத்தில் நடைபெறும் டெண்டரில் தான் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

இந்த நெருக்கடியான சூழலில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ய தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுக்கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் பொன்னம்பலம் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“எங்களுடைய பிரதான கோரிக்கை, கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது போல் மண்டல அளவில் வாடகை டெண்டரை நடத்த வேண்டும் என்பது தான். இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் கடந்த 2 மாதங்களில் பல முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம். மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி உள்ளோம்.

இருப்பினும் வாடகை டெண்டர் முறையில் பழைய நடைமுறையை செயல்படுத்த முடியாது என தெரிவித்துவிட்ட எண்ணெய் நிறுவனங்கள் டெண்டர் தேதியையும் அறிவித்து விட்டன. இதனால் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மாநில அளவிலான வாடகை டெண்டர் நடைமுறையை திரும்பபெற வலியுறுத்தி 12-ந் தேதி (நாளை) முதல் காலவரை யற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் கார்த்திக், பொருளாளர் கணபதி, உபதலைவர் தங்கவேல், துணைத்தலைவர் செந்தில்குமார், இணை செயலாளர் கணேசன், துணை செயலாளர் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கும் பட்சத்தில், தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. 

மேலும் செய்திகள்