ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக 214-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக 214-வது நாளாக மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பேராசிரியர் ஜெயராமனை விடுவிக்காவிட்டால் மறியலில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

Update: 2018-02-10 23:00 GMT
திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கதிராமங்கலத்தில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைப்போல கதிராமங்கலம் அய்யனார்கோவில் திடலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி முதல் மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று கதிராமங்கலம் மக்களின் காத்திருப்பு போராட்டம் 214-வது நாளாக நடைபெற்றது. அப்போது நன்னிலம் அருகே கடம்பக்குடியில் ஓ.என்.ஜி.சி. மற்றும் கெயில் நிறுவன ஆய்வு பணிகளை எதிர்த்து போராடிய மீத்தேன் திட்ட எதிர்ப்பு அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 200 பேரை போலீசார் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர். இது குறித்து கதிராமங்கலம் போராட்டக்குழுவினர் கூறியதாவது:-

மத்திய அரசு நில வளத்தை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் தான் கவனம் செலுத்துகிறது. மண்ணையும், மக்களையும் காக்க போராடும் மக்களை பற்றி கவலைப்படவில்லை. தற்போது பேராசிரியர் ஜெயராமன் மற்றும் பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய- மாநில அரசுகள் ஓ.என்.ஜி.சி. ஆய்வு குழாய்களை அமைக்க தான் துணை நிற்கிறது. நிலவளத்தை பாதிக்கும் வகையில் கச்சா எண்ணெய் எடுப்பதால் வளமான பகுதிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். மக்களை விட ஓ.என்.ஜி.சி. தான் முக்கியம் என்று அரசு வெளிப்படையாக கூறிவிட்டால் கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள். தேர்தலில் அரசியல் வாதிகள் ஓ.என்ஜி.சி. நிறுவனத்திடம் ஓட்டு கேட்டு கொள்ளட்டும். மக்களை பற்றி கவலைப்படாதவர்கள் எப்படி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்கள் என்று பார்ப்போம். கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கதிராமங்கலம் போராட்டக்குழுவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்